பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

மாயா விநோதப் பரதேசி

அவனைச் சித்திரவதை செய்யத் தொடங்கினாள். ரயில் வண்டி அபாரமான விசையோடு ஓடுவதும், ஆங்காங்கு காணப்படும் சிறிய ஸ்டேஷன்களில் நிற்காமல் பெரிய ஸ்டேஷன்களில் மாத்திரம் இரண்டொரு நிமிஷ நேரம் நிற்பதும், மறுபடி பறப்பதுமாகப் போய்க் கொண்டே இருந்தது. மற்ற வண்டிகளில் ஜனங்கள் ஏறினரே அன்றி அவர்கள் இருந்த வண்டியில் எவரும் ஏறவில்லை. ஆகவே அந்த இரவு முழுதும் தமது வண்டியில் எவரும் ஏறமாட்டார்கள் என்ற உறுதி அவர்களது மனதில் ஏற்பட்டது. அவ்வாறு இன்பகரமாகப் பிரயாணம் செய்தது, ரமாமணியின் பெற்றோர் மனதிலும் ஒருவிதமான குதூகலத்தையும், ஆனந்தத்தையும், யௌவனத் தன்மையையும் உண்டாக்கியது ஆகையால், அவர்கள் இருவரும்கூட குழந்தை போல சந்தோஷமாக இருக்கத் தொடங்கி, தமது மூட்டைக்குள் வைத்திருந்த பக்ஷண பலகாரங்கள் முதலியவற்றை எல்லாம் எடுத்து, இளையோர் இருவருக்கும் வழங்கித் தாமும் உண்டு களித்தனர். பிறகு காப்பி தாம்பூலம் முதலியவை கொடுக்கப்பட்டன. அவைகளை எல்லாம் வாங்கிய ரமாமணிதான் அதிகமாய் எதையும் உண்ணாமல் தலையணையில் பஞ்சடைப்பது போல, எல்லாவற்றையும் பக்கிரியா பிள்ளையின் வாயில் போட்டு அவனை உண்ண வைப்பதே பெருத்த இன்பமாக மதித்து, யாவற்றையும் அவனது வயிற்றில் வைத்துத் திணிக்க, அவன் அவளது கோபத்திற்குப் பாத்திரனாகக் கூடாதென்ற அச்சத்தினால், அவள் கொடுத்ததை எல்லாம் உள்ளே செலுத்தியபடியே இருக்க, அவள் அவனைக் குழந்தையின் கையில் அகப்பட்ட பதுமை போலவும், குரங்கின் கைப்பூமாலை போலவும் நடத்தி, அமிதமான சுகத்தினால் நிமிஷத்திற்கு நிமிஷம் அவனைக் கொன்று கொண்டே இருந்தாள்.

அவ்வாறு ரமாமணியம்மாள் தனது ஆசை நாயகனோடு விளையாடிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க, அவளது தொற்று வியாதி அவளது தாய் தகப்பன்மாரையும் பிடித்துக் கொண்டதோ என்று நினைக்கும்படி அவர்களும் அளவற்ற மன