பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

245

எழுச்சியும் குதூகலமும் அடைந்து உண்டு களித்து வேடிக்கையாக சம்பாஷித்து இன்பகரமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். அவர்களது உடம்பு சோர்வடையாமலேயே இருந்தது ஆகையால், அவர்கள் அன்றைய இரவில் தூங்க உத்தேசித்தவர்களாகவே தோன்றவில்லை.

அந்த நிலைமையில் ரயில் வண்டி விர்ரென்று அம்பு பாய்வது போல ஒரே விசையாகப் பறந்து போவதும், வெகு தூரத்திற்கு ஓரிடத்தில் குறுக்கிடும் பெரிய ஸ்டேஷன்களில் நிற்பதுமாய்ச் சென்று கொண்டே இருந்தது. அப்போது நடுநிசி சமயம் ஆதலால், எங்கும் நிச்சப்தமே மயமாக நிறைந்திருந்தது. கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் காணப்பட்ட மரங்களும், செடி கொடிகளும், வயல்களில் நிறைந்திருந்த பயிர்களும், ஆறுகளும், வாய்க்கால்களும், கோவில்களும், குளங்களும், இன்னும் மனிதர், விலங்கு, பறவை, புழுப்பூச்சி முதலிய சகலமான ஜீவ ஜெந்துகளும் ஓய்ந்து ஒடுங்கி நித்திரா தேவியின் வசீகர சக்தியால் கவரப்பெற்று அசைவற்று உணர்வற்று ஓய்ந்து போயிருந்தன. ஆகாயப் பரப்பில் நிறைந்திருந்த கோடானுகோடி நக்ஷத்திரச் சுடர்கள் மாத்திரம் கண் விழித்து நீலநிற அரங்க மேடையில் நாடகம் ஆடிக் கொண்டிருந்தன. மனிதர் துயிலுகையில் அவர்களது சர்வாங்கமும் ஒடுங்கி உணர்வற்றுப் பிணம் போல ஓய்ந்து கிடக்க, அவர்களது மூளைக்குள் மாத்திரம் உக்கிரமான சொப்பனக் காட்சிகள் அபரிமிதமான வேகத்தோடு தோன்றிக் கொண்டிருப்பது போல உலகமே ஒடுங்கி உணர்வற்று நிச்சப்தமாய் இருந்த அந்தச் சந்தர்ப்பத்தில், அந்த ரயில் வண்டி மாத்திரம் ஊர்களையும், வயல்களையும், ஆறுகளையும், தோப்புகளையும் கிழித்துக் கொண்டு அபாரமான விசையோடு ஊடுருவிப் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது. அவ்வாறு சென்ற வண்டி அநேக ஸ்டேஷன்களில் நின்றதானாலும் ஜனங்கள் வந்து மற்ற வண்டிகளில் ஏறினார்களே அன்றி, ரமாமணி முதலியோர் இருந்த இரண்டாவது வகுப்பு வண்டியில் ஏறவில்லை. ஆனால், வண்டி கடைசியாக சிதம்பரத்திற்கு வந்து நின்ற காலத்தில், ரமாமணி இருந்த வண்டியின் கதவு தடேரென்று திறக்கப்பட்டது. அது