பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

249

கருதி நாணமும் அடக்கமும் காண்பித்து மரியாதையாக உட்கார்ந்து கொண்டதன்றி, அங்கே யார் இருக்கிறார்கள் என்று அநாகரிகமாய்ப் பார்க்காமல், தனது ஜெப மாலையில் உள்ள உருத்திராக்ஷ மணிகளை நகர்த்தியபடி ஏதோ இஷ்ட தெய்வ நாமத்தை உருக்கமாக ஜெபித்துக் கொண்டே இருந்தாள். சிதம்பரம் ஸ்டேஷனை விட்டுப் புறப்பட்ட வண்டி முன் போல அபரிமிதமான விசையோடு கடுகிப் பாய்ந்து பல சிறிய ஸ்டேஷன்களை மதியாமல் வெகுதூரத்திற்கு ஓரிடத்தில் காணப்படும் பெரிய ஸ்டேஷன்களில் நின்ற வண்ணம் சென்று கொண்டே இருந்தது. சிதம்பரத்தில் உட்கார்ந்த விதவையம்மாள் தான் இருந்த வண்டியில் வேறே யார்யார் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்ற எண்ணமே கொள்ளாதவளாயும், அவர்கள் இருந்த பக்கத்தில் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று கூட நினையாமலும் தனது கவனத்தையும் பார்வையையும் வேறு எங்கேயோ வைத்துக்கொண்டு தனது இஷ்ட தெய்வ ஜெபம் செய்வதே மணியமாக உட்கார்ந் திருந்தாள்.

அதுவரையில் தாங்கள் ஏகாதிபத்தியமாய் அனுபவித்து வந்த இடத்தில் அன்னிய மனுஷி ஒருத்தி வந்து விட்டாளே என்ற ஆத்திரமும் அருவருப்பும் பொங்கிய மனதோடு, தமது குதூகலத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த மற்ற நால்வரும் வெகு நேரம் வரையில் மௌனமாகவே இருந்தனர். ஆனால், புதிதாக வந்த அம்மாளினது சுத்த சாத்வீகத் தன்மையையும், அவளால் தங்களுக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லை என்பதையும் காணக்காண, அவர்களது ஆத்திரமும், அருவருப்பும் படிப்படியாய்க் குறையத் தொடங்கின. எவ்வளவு நீண்ட காலமானாலும் தனது காதலனுக்கு அருகில் இருந்து அவனுடன் விளையாடுவது சிறிதும் தெவிட்டாத தேவாமிர்த பானம் போல ரமாமணிக்குத் தோன்றியது ஆகையால், அவனை விட்டுப் பிரிந்திருந்த அந்தச் சொற்ப காலமும் ஒரு கற்பகாலம் போல அவளுக்குத் தோன்றியது ஆகையால், அவள் தனது உயிரையே விட்டுப் பிரிந்து தவிப்பவள் போலத் தத்தளித்திருந்து, புதிதாய் வந்த விதவையம்மாள் தங்களைக் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து மெதுவாக நகர்ந்து பக்கிரியா பிள்ளை இருந்த சோபா