பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

மாயா விநோதப் பரதேசி

ஆகவே, ரமாமணியம்மாள் பக்கிரியா பிள்ளையைத் தனியாக இருக்க விடுத்து, அது வரையில் நீலலோசனியம்மாள் கூறிய சொற்களைச் சிறிதும் கேளாதவள் போலவும், தனது தாயினிடம் இருந்த தண்ணீர்க் கூஜாவில் இருந்து தண்ணிர் குடிக்க வருபவள் போலவும், மெதுவாக எழுந்து வந்து, "அம்மா ரயில் பிரயாணம் செய்தால் உடம்புக்கு அதிக சூடு உண்டாகும் என்று சொல்லுவார்கள். அது நிஜமான விஷயம். எனக்கு நெஞ்சு காய்ந்து காய்ந்து போகிறது. ஒரே தாகமாக இருக்கிறது. நானும் இது வரையில் பத்துப் பதினைந்து தடவை தண்ணீர் குடித்து விட்டேன். வயிறு மாத்திரம் பிரம்மாண்டமாகப் பெருத்து போய்த் தூக்க முடியாமல் இருக்கிறது. நாக்கு மாத்திரம் வறண்டு வறண்டு போகிறது. கூஜாவில் இன்னம் கொஞ்சம் தண்ணீர் இருந்ததே. அதைக் கொடுங்கள்" என்று குழந்தை போலக் கொஞ்சி பேசிய வண்ணம் தனது தாயினிடம் போக, அவளது நயவஞ்சகங்களை நன்றாக அறிந்திருந்த அவளது தாய் தனது மகள் ஏதோ உள் கருத்தோடு அங்கே வந்திருக்கிறாள் என்றும், அது அநேகமாய் நீலலோசனி யம்மாளைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும் என்றும் ஒரு விதமாக யூகித்துக் கொண்டு, தனது மகளிடம் மிகுந்த அன்பும் சந்தோஷமும் காட்டி கூஜாவில் இருந்த தண்ணீரைப் பருகக் கொடுத்த பின், "அம்மா இப்படியே தான் உட்கார்ந்து கொள்ளேன்; நான் ஒரு புதிய சிநேகிதம் சம்பாதித்து இருக்கிறேன். இவர்கள் யார் என்பதை நீயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் நம்முடைய ஊருக்கே விருந்தாளியாக வரப் போகிறவர்கள்" என்று மதிப்பாகக் கூறினாள்.

உடனே ரமாமணியம்மாள் அப்போதே திரும்பி நீலலோசனியம்மாளைப் பார்ப்பவள் போல நடித்து, அன்பும் வசீகரமும் அரும்ப தனது முகத்தை அழகாக மலர்த்தி அந்த அம்மாளை நய மாகவும் மரியாதையாகவும் பணிவாகவும் உற்று நோக்கியபடி "ஓகோ அப்படியா? நம்முடைய ஊருக்கா விருந்தாளியாய் வரப் போகிறார்கள்! எல்லா மனிதருக்கும் சொந்தமான காரியத்தை ஒருவர் கூட கவனிக்கமாட்டார்கள் என்று ஒரு சுலோகம் சொல்லுவார்கள். ஏனென்றால், அது எல்லோருக்கும் சொந்தம் ஆசையால், நாம் ஏன் கவனிக்க வேண்டும், மற்றவர்கள் கவனிக்கட்டும்!