பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

மாயா விநோதப் பரதேசி

அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் மிகுந்த களிப்பும் புன்னகையும் தோற்றுவித்து, "ஆகா குழந்தை இருந்தாலும் இப்படி அல்லவா இருக்க வேண்டும். உங்கள் குணம் எப்படி இருக்கிறதோ, அது போலவே, உங்கள் குழந்தையின் குணமும் தேவாமிருதம் போல நிரம்பவும் மாதுரியமாக இனிக்கிறது. குழந்தை பேசுகிறதைக் கேட்டுக் கொண்டிருந்தால், மனிதருக்குப் பசி தாகம் முதலியவைகூட உண்டாகா என்றே நினைக்கிறேன். இந்தக் குழந்தையின் அழகையும் அது பேசும் விதரணையையும் பார்க்கும் போது, இப்படிப்பட்ட மாணிக்கக்கட்டி ஒன்று நம்முடைய வயிற்றில் ஜனித்திருக்கக் கூடாதா என்ற ஒரு விசனம் என் மனசில் பொங்குகிறதம்மா. ஆனால், நான் இப்படி பேசுவதிலிருந்து நான் உங்கள் பெண்ணைக் கண்டு பொறாமைப்படுகிறேன் என்று நினைக்க வேண்டாம். ஈசுவரன் எனக்கு ஒர் ஆண்குழந்தையைக் கொடுக்காவிட்டாலும், இப்படிப்பட்ட அருமையான லட்சணங்கள் பொருந்திய ஒரு பெண் குழந்தையையாவது எனக்கு அளித்திருந்தால், என்னுடைய சகலமான சம்பத்தும் போனதைப் பற்றி நான் நினைக்கவே மாட்டேன். அந்தப் பெண்குழந்தை ஒன்றையே நான் ஒப்பற்ற நிதியாக வைத்துக் கொண்டாடுவேன். என் ஆயிசுகாலம் வரையில் நான் அதற்கு என்னால் ஆன தேக உதவியைச் செய்து என் வாழ் நாளைக் கடத்துவேன். கடவுள் அந்த விஷயத்திலும் பெரிய சதி செய்து விட்டார்" என்றாள்.

ரமாமணியின் தாய், "உங்கள் வயிற்றில் தான் குழந்தை பிறக்காமல் போய்விட்டதே. நீங்கள் யாரையாவது சுவீகாரக் குழந்தையாக வளர்த்துக் கொள்ளுகிறது தானே?" என்றாள்.

அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தபடி நீலலோசனியம்மாளை நிரம்பவும் வாஞ்சையாகவும் மகிழ்ச்சியாகவும் பார்த்தபடி ரமாமணியம்மாள், "பாட்டி! என்னைத்தான் நீங்கள் சுவீகாரப் பெண்ணாக வளர்த்துக் கொள்ளுங்களேன். நீங்கள் எப்படி எங்களைக் கண்டு எங்கள் குணத்தைப் பற்றிப் புகழுகிறீர்களோ, அது போல உங்களைப் பார்க்கும் போதே என் மனசில் தானாகவே ஒருவித வாஞ்சையும், பாசமும் உண்டாகி இழுக்கின்