பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

271

களுடைய வரலாற்றைக் கேட்டபிறகு, "அடாடா! நாம் எப்பேர்ப்பட்ட பரமபாதகமான நினைவைக் கொண்டோம்" என்று எங்கள் மனமே எங்களை அறுக்கிறது. இப்பேர்ப்பட்ட சிரேஷ்டமான மனிதருடைய பரிச்சயமும் பிரியமும் எங்களுக்கு ஈசுவரன் உண்டாக்கிக் கொடுத்த தைப்பற்றி நாங்கள் அடையும் ஆனந்தம் சொல்லி முடியாது. இனி நம்முடைய சிநேகமும் வாஞ்சையும் வளர்பிறைச் சந்திரன் போல வளர்ந்து, கரும்பை நுனியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டு அடிக்குப் போவது போல நாளுக்கு நாள் அதிகரிக்கும் இன்பத்தை யும் ஆனந்தத்தையும் கொடுக்க வேண்டுமாய் கோவில்களில் உள்ள தெய்வங்களை எல்லாம் நான் வேண்டிக் கொள்ளுகிறேன்" என்றாள்.

அவ்வாறு அவர்கள் மூவரும் மேன்மேலும் பற்பல விஷயங்களைப் பற்றி சம்பாஷித்துக் கொண்டே பொழுதைப் போக்கினர். நீலலோசனியம்மாள் அந்த வண்டியில் ஏறியது முதல் கடைசி வரையில் நிகழ்ந்த சம்பாஷணை முழுதையும் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த ரமாமணியம்மாளின் தகப்பனார் சிறிது நேரத்திற்குப் பிறகு எழுந்து உட்கார்ந்து, நீலலோசனியம் மாளோடு நயமாகப் பேச்சுக் கொடுத்து, மற்ற இருவர்களைப் போல, அவரும், அவளிடம் அன்னியோன்னிய பாவத்தை உண்டாக்கிக் கொண்டு அவர்களது சம்பாஷனையில் கலந்து கொண்டார். நீலலோசனியம்மாளது ஐந்து லட்சம் ரூபாயும், அவளது அநாதரவான நிலைமையும், அபார சக்தி வாய்ந்த காந்தம் இரும்பை இழுப்பது போல, அவர்கள் மூவரையும் நீலலோசனியம்மாளிடம் கவர்ந்து கொண்டன. பக்கிரியா பிள்ளை மாத்திரம் தூரத்தில் இருந்தபடியே அவர்களது சம்பாஷணையை அப்போதைக்கப்போது கவனிப்பதும், துரக்கத்தினால் ஆடி விழுவதுமாய்த் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். கும்பகோணத்தில் உள்ள தமது வீட்டின் இரண்டாவது கட்டில் நீலலோசனியம்மாள் ஜாகை வைத்துக் கொள்ளலாம் என்று ரமாமணியம்மாள் சொன்னதும், தான் அவளுக்கு அபிமான புத்திரியாய் இருப்பதாய் மறை பொருளாகக் கூறியதும், அவளிடம் உள்ள பொருளை அபகரிக்க வேண்டும் என்ற கருத்தோடுதான் என்பதை அவளது தாய் தந்தையார் இருவரும்