பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

277

அவ்விடத்தை விட்டு எங்கேயோ போயிருந்து, மறுபடி பகல் இரண்டு மணிக்குத் திரும்பி வந்து சேர்ந்தாள். சேர்ந்தவள் நன்றாக ஸ்நானம் செய்து பளிச்சென்று விபூதியணிந்து நார்மடி ருத்திராக்ஷம் ஜெபமாலை முதலிய வசீகரமான அங்கங்களோடு காணப்பட, அவளைக் கண்ட விசாலாகூஜியம்மாள், "அம்மா! சமையல் ஆய்விட்டது. முதலில் நீங்கள் போஜனம் செய்ய வாருங்கள். நீங்கள் காலையில் கூட காப்பி சாப்பிடவில்லை. மணி இரண்டாகிறது" என்று அந்தரங்கமான வாஞ்சையோடு உபசரித்து அழைக்க, அந்த அம்மாள், "அம்மா! நான் இங்கே இருந்து புறப்பட்டுப் போனேன் அல்லவா, போய் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்து அநுஷ்டானங்களை முடித்து விட்டு இங்கே வந்து கொண்டிருந்தேன். வழியில் ஏராளமான வாடகை மோட்டார் வண்டிகள் பறந்து கொண்டிருக்கின்றன. மயிலாப்பூர், மயிலாப்பூர் என்று சில வண்டிக்காரர்கள் கத்தினார்கள். அவர்கள் என்னைப் பார்த்து மயிலாப்பூருக்கு வருகிறீர்களா என்று கேட்டார்கள். எவ்வளவு நேரத்தில் மயிலாப்பூர் போகலாம் என்று நான் கேட்டேன். பதினைந்து நிமிஷ நேரத்தில், அங்கே கொண்டு போய்விடுவதாகச் சொன்னார்கள். என் மனசில் உடனே ஒர் எண்ணம் உதித்தது. சமுத்திர ஸ்நானம் செய்ததுதான் செய் தோம். மயிலாப்பூருக்குப் போய் கபாலீசுவர தரிசனம் செய்து கொண்டு வந்துவிடுவோம் என்ற யோசனை தோன்றியது. உடனே நான் ஒரு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். கால் மணியில் மயிலாப்பூர் போய்ச் சேர்ந்து, ஆனந்தமாக சுவாமி தரிசனம் செய்து கொண்டேன். நேற்று நான் சரியானபடி ஆகாரம் சாப்பிடாமையால் வயிறு கொஞ்சம் பசிப்பது போலத் தோன்றியது. கோவிலுக்குப் பக்கத்தில் பிராமணர்களுடைய சாப்பாட்டுக் கடை ஒன்று இருக்கிறது. அங்கே போய் நான் போஜனம் செய்து கொண்டு வந்து விட்டேன். என் சாப்பாட்டுக் கவலை நீங்கிவிட்டது. இனி நான் படுத்துத் தூங்க வேண்டும். இன்று முழுதும் நான் எங்கேயும் போகப் போகிறதில்லை. இராத்திரி வேண்டுமானால், இங்கேயே சாப்பிடுகிறேன். எங்களைப் போல நீங்களும் நேற்று இராத்திரி முழுதும் தூங்காமலே இருந்து இன்று இவ்வளவு நேரம் பாடுபட்டு சமையல் செய்திருக்கிறீர்கள்.