பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மாயா விநோதப் பரதேசி

இருந்து பார்த்தானாம். அப்போதும் முடிவு தெரியவில்லையாம். ஆகையால் அவன் அன்றைய தினம் இரவில் அங்கேயே தங்கி நேற்று காலையில் எழுந்து பங்களாவண்டை போய் விசாரித்தானாம். முதல் நாளைய இரவிலேயே சாமியார் இறந்து போய் விட்டான் என்றும், வேலாயுதம் பிள்ளை வீட்டாரும், சுந்தரம் பிள்ளை வீட்டாரும், போலீசாரும் பிணத்தை எடுத்துக் கொண்டு போய்க் கொளுத்தி விட்டார்கள் என்றும் ஜனங்கள் சொல்லிக் கொண்டார்களாம். அவன் நேற்று மத்தியானம் வரையில் மன்னார் குடியிலேயே இருந்து, வேலாயுதம் பிள்ளை வீட்டார் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதையும் தெரிந்து கொண்டு வந்தானாம்.

இடும்பன் சேர்வைகாரன்:- ஓகோ! அப்படியா சங்கதி! வேலாயுதம் பிள்ளை வீட்டார் இனி பேசிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது?

மாசிலாமணி:- அவர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை நடத்துவதாக உத்தேசித்திருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தக் கூடாதென்றும், அதை நடத்திவிட வேண்டும் என்றும் முடிவு செய்திருப்பதாக அவர்களுடைய வேலைக்காரன் சொல்ல, நம்முடைய ஆள் அதைத் தெரிந்துகொண்டு உடனே புறப்பட்டு என்னிடம் வந்து எல்லா விவரங்களையும் சொன்னான்.

இடும்பன் சேர்வைகாரன்: (ஏளனமாக நகைத்து) ஓகோ! அவர்கள் நிச்சயதார்த்தத்தை அடுத்த வெள்ளிக்கிழமை நடத்தப் போகிறார்களே நடத்தட்டும். அதற்குள் அந்தப் பெண்ணுக்கு இங்கே நீங்கள் கலியாணம் லாலி ஊஞ்சல் எல்லாம் நடத்தி மங்களமும் பாடி விடுவீர்கள். அவர்கள் பட்டணம் போய் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு திரும்பி வரட்டும்.

மாசிலாமணி: அவர்கள் பட்டணத்துக்கு ஏன் போவார்கள்? நேற்று இரவில் பெண் காணாமல் போய்விட்ட தென்று பட்டாபிராம பிள்ளை இன்றைய தினமே தந்தியோ, அல்லது, கடிதமோ இவர்களுக்கு அனுப்பிவிட மாட்டானா? அதைப் பார்த்தால், இவர்கள் தங்களுடைய பிரயாணத்தை நிறுத்திக் கொள்ளப் போகிறார்கள்.