பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

279

மாளுடன் கூடவே இருந்து தன்னாலான உதவிகளைச் செய்தாள். அன்றைய பகல் பொழுது கழிந்து போக, இரவு வந்தது. எல்லோரும் இராப்போஜனத்தை முடித்துக் கொண்டு, தத்தம் படுக்கைகளை எடுத்து விரித்துக் கொண்டு செளக்கியமாகப் படுத்துக்கொண்டனர். பகலில் செய்தது போலவே நீலலோசனியம்மாளே இரவிலும் எல்லோருக்கும் பரிமாறி போஜனம் செய்து வைத்தாள். அந்த அம்மாள் பரிமாறும் விஷயத்தில் உதவி செய்தது விசாலாக்ஷியம்மாளுக்கு நிரம்பவும் அனுகூலமாகவும் இதமாகவும் இருந்ததன்றி, அதனால் அவளது பிரியமும் தங்களிடம் அதிகரித்துக் கொண்டு போவது போலத் தோன்றியது. ஆனால், அன்றைய இரவிலாவது நீலலோசனியம்மாளை உண்பிக்க வேண்டும் என்று விசாலாகூஜியம்மாள் முயற்சித்தது மாத்திரம் பலிதமடையாமல் போய்விட்டது. நீலலோசனியம்மாள் விசாலாகூரியம்மாளைப் பார்த்து, “அம்மா! நான் அநேகமாய் மத்தியான வேளைச் சாப்பாட்டோடு போட்டு விடுவதே வழக்கம். இன்று மத்தியானம் அந்தச் சாப்பாட்டுக் கடையில் நான் சாப்பிட்டது இன்னம் அப்படியே இருக்கிறது. எனக்கு இப்போது ஒன்றும் தேவையில்லை. பக்கத்தில் உள்ள கடைக்குப் போய் நான் இரண்டு வாழைப்பழங்கள் வாங்கி வைத்திருக்கிறேன்; அதையும் கொஞ்சம் பாலையும் சாப்பிடுவதே போதுமானது. இது பெரிய பட்டணம். இவ்விடத்தில் சாப்பாட்டு விஷயத்தில் நிரம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், நான் இங்கிருந்தபடியே இன்னம் இரண்டொரு ஸ்தலங்களுக்குப் போகவேண்டும். உடம்பைக் கெடுத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தால், என்னால் மற்றவர்களுக்கும் இடைஞ்சல் ஏற்படும். நாளைய தினம் அதிகாலையில் எழுந்து நான் திருவொற்றியூருக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து கொண்டு, பட்டினத்தாருடைய சமாதி முதலிய விசேஷங்களைப் பார்த்துவிட்டு அந்தியில் வந்து சேருகிறேன். அதன் பிறகு எனக்கு உடம்பு கெட்டாலும் பரவாயில்லை. அதன் பிறகு நீங்கள் எனக்கு விருந்து செய்யுங்களேன்” என்றாள்.

அதைக் கேட்ட விசாலாக்ஷியம்மாள் அவ்வளவோடு திருப்தி அடைந்து படுத்துக்கொண்டாள். நீலலோசனியம்மாளும் செளகரியமான ஒரு மூலையில் போய்ப் படுத்துக்கொண்டாள்.