பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

281


விசாலாக்ஷியம்மாள், “அம்மா! நாங்கள் இந்த ஊரில் இந்தத் தடவை அதிகநாள் இருக்க உத்தேசிக்கவில்லை. ஒரு காரியத்தைக் கருதி வெள்ளிக்கிழமை வரையில் நாங்கள் இந்த ஊரில் இருப்போம். சனிக்கிழமை இரவு வண்டியில் புறப்படப் போகிறோம். இன்று நீங்கள் திருவொற்றியூர் போய் வந்துவிடுங்கள். இன்னும் பார்க்க வேண்டிய இடம் ஏதாவது பாக்கி இருந்தால் அதை நாளைய தினத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள். மறுநாளாகிய சனிக்கிழமையன்று நாங்கள் சாமான்களை எல்லாம் சேர்வைகாரர் வசம் ஊருக்கு அனுப்பிவிட்டு உங்களோடு வருகிறோம். இப்படியே அரக்கோணம் மார்க்கமாகத் திருத்தணிகை, திருவண்ணாமலை ஆகிய இரண்டிடங்களுக்கும் போய்விட்டு அப்படியே ஊருக்குப் போய்விடுவோம்” என்றாள்.

அந்த ஏற்பாட்டை மிகுந்த சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்ட நீலலோசனியம்மாள் பக்கிரியா பிள்ளையைத் தன்னோடு அழைத்துக் கொண்டு தங்களுக்காக வந்திருந்த குதிரை வண்டியில் ஏறிக்கொள்ள இருவரையும் வைத்துக் கொண்டு குதிரை வண்டி திருவொற்றியூர் போய்ச் சேர்ந்தது. ரமாமணியம்மாள் முதலியோர் பக்கிரியா பிள்ளையை நீலலோசனியம்மாளுடன் அனுப்பியதன் முக்கிய கருத்து, அவனுக்கும் தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றும், அவன் நீலலோசனியம்மாளைச் சேர்ந்தவன் என்றும் இடும்பன் சேர்வைகாரன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே. அதோடு, நீலலோசனியம்மாளுக்கும் தாம் உதவி செய்வது போல நடித்து, அவளது பிரியத்தைக் கவர வேண்டும் என்பது இரண்டாவதான கருத்து. ஆனால், ரமாமணியம்மாள் பக்கிரியா பிள்ளையினிடம், எவ்வளவு தூரம் அவசியமோ அவ்வளவு தூரம் விஷயங்களைத் தெரிவித்தாளே அன்றி தங்கள் சதியாலோசனைகளை எல்லாம் அடியோடு தெரிவிக்கவில்லை ஆதலால், அவனுக்கு அவள் சம்பந்தப்பட்ட வரலாறுகளில் பெரும்பாகமும் தெரியாமல் இருந்தது. ஆனால், அவன் ரமாமணியம்மாளின் புருஷன் என்றே கடைசி வரையில் நீலலோசனி யம்மாளிடம் நடிக்க வேண்டும் என்று அவனை எச்சரித்து வைத்திருந்தார்கள் ஆதலால், அதை மாத்திரம் அவன் உறுதியாக மனதில்