பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

மாயா விநோதப் பரதேசி

தோன்றவில்லை. இந்தப் பெண்ணை அதன் தகப்பனார் அந்த மாசிலாமணிப் பிள்ளைக்குக் கொடுப்பதாகச் சொல்லி கடைசியில் ஏமாற்றிவிட்டாராம். இந்தக் கலியாணம் நடக்காமல் செய்து அந்தப் பெண்ணைத் தானே கட்டிக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த மாசிலாமணிப் பிள்ளையின் எண்ணம் போலிருக்கிறது. வேறு வித்தியாசம் எதுவும் இராதென்று நினைக்கிறேன்” என்றான்.

அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் முற்றிலும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தவளாய்த் தனது ஜெபத்தில் புத்தியைச் செலுத்தத் தொடங்கினாள். அதன் பிறகு அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் லோகாபிராமமாய் அப்போதைக் கப்போது வார்த்தை சொல்லிக் கொண்டே இருக்க, பொழுதும் கழிந்தது. மாலை நான்கு மணியாயிற்று. நீலலோசனியம்மாள் பக்கிரியா பிள்ளையை மறுபடி ஏதாவது ஆகாரம் பார்த்துக் கொண்டு வரச் செய்து, அவனோடு குதிரை வண்டியில் உட்கார்ந்து கொண்டு திருவொற்றியூரை விட்டுப் பிரயாணமானாள். வண்டியின் குதிரை அதிக வயதான கிழக்குதிரை ஆதலால், அது நிரம்பவும் மெதுவாகவே ஓடிவந்து பட்டணத்தை அடைய மாலை ஏழுமணி சமயமாயிற்று. அன்றைய பகல் முழுதும் ரமாமணியம்மாளும் அவளது பெற்றோரும் பட்டணத்தில் உள்ள வேடிக்கைகளில் பலவற்றைப் பார்த்து விட்டுத் திரும்பி வந்தனர். விசாலாகூஜியம்மாள் அன்றைய இரவிலாவது நீலலோசனியம்மாளை உண்பிக்க வேண்டும் என்ற கருத்தோடு வடை பாயாசங்களோடு கூடிய மாதுரியமான போஜனம் தயாரித்து வைத்து விட்டு, திருவொற்றியூருக்குச் சென்றவரின் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள். குதிரை வண்டி வந்து நின்றவுடனே விசாலாக்ஷியம்மாள் ஓடோடியும் வந்து அளவற்ற சந்தோஷத்தோடும் புன்னகையோடும் நீலலோசனியம்மாளை வரவேற்று, “ஆகா! எவ்வளவு நேரமாக உங்கள் வழியைப் பார்த்துப் பார்த்து கண் பூத்துப்போய் விட்டது. நீங்கள் ஒருவேளை இன்றைய இரவு அங்கேயே தங்கி நாளைக்கு வரத் தீர்மானித்துவிட்டீர்களோ என்று சந்தேகித்தோம். ஏன் இவ்வளவு தாமசம்” என்று கூறிய வண்ணம், வண்டியின் பின்பக்கத்துக் கம்பியை விலக்க, நீலலோசனியம்மாளும்