பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

மாயா விநோதப் பரதேசி

இருவரும் பரிமாறுகிறதென்றும் அவர்களுக்குள் முடிவு செய்து கொண்டனர். அதற்கு இணங்க, ரமாமணியம்மாள், அவளது தந்தை, பக்கிரியா பிள்ளை ஆகிய மூவரும் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டனர். இடும்பன் சேர்வைகாரனும், போயியும் தனித்தனி வெவ்வேறு இடத்தில் உட்கார்ந்து கொண்டனர். விசாலாக்ஷியம்மாளும் நீலலோசனியம்மாளும் அவர்களுக்குப் பரிமாறி எல்லோரையும் திருப்திகரமாக உண்பித்தனர். பிறகு அவர்கள் இருவரும் தனித்தனியாய் உட்கார்ந்து தமது போஜனத்தையும் முடித்துக் கொண்டனர். அதன் பிறகு தாம்பூலம் தரித்துக் கொள்ளத் தக்கவர்கள் அந்த வேலையை முடித்துக் கொள்ள, அவர்கள் முதல் நாள் இரவில் எந்தெந்த இடத்தில் சயனித்துக் கொண்டார்களோ, அந்தந்த இடத்திற்கு, தத்தம் படுக்கையோடு போய்ச் சேர்ந்து படுத்து ஒவ்வொருவராய்த் துயிலில் ஆழ்ந்து போயினர். நீலலோசனியம்மாள் தனது மடி சஞ்சியைத் தலையின் கீழ் வைத்துக் கொண்டு முதல் நாள் இரவில் செய்தது போலத் துயின்று கொண்டிருந்தாள். அவர்கள் எல்லோரும் படுத்திருந்த இடம் விசாலமான ஒரு கூடம். அவர்களைத் தவிர, அந்தக் கூடத்தில் வேறு நாலைந்து பிரயாணிகளும் சயனித்துக் குறட்டை விட்டுத் துயின்று கொண்டிருந்தனர். அவ்விடத்தில் கொசுக்கடி அதிகமாக இருந்ததைக் கருதி, அவ்விடத்தில் தொங்கிய ஆறு பட்டை லாந்தரின் தீபத்தை அவர்கள் அனைத்துவிட்டனர் ஆதலால், அந்த இடம் இருள் மயமாக நிறைந்திருந்தது.

விடியற்காலம் மூன்று மணி சமயம் இருக்கலாம். எல்லோரும் அயர்ந்து குறட்டை விட்டு நிரம்பவும் சுவாரஸ்யமாகத் துங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்தக் கூடத்தில் ஒரு பெரிய கூச்சல் உண்டாயிற்று. “ஐயோ! ஐயோ! திருடன்! திருடன்!” என்று ஒரு ஸ்திரீ கூக்குரலிட்ட ஓசை கேட்டது. கூடத்தில் படுத்திருந்த எல்லோரும் திடுக்கிட்டு விழித்துக் கொண்டு குபீர் என்று எழுந்து, “எங்கே திருடன்? யார் கத்தினது?” என்று ஆவலோடு கேட்டனர். சிலர், “விளக்கைப் பற்ற வையுங்கள்” என்றனர். சிலர், “வாசற் கதவைத் திறக்க வேண்டாம்” என்றனர். ஒருவர் அவ்விடத்தில் இருந்த ஆறுபட்டை லாந்தரைக் கொளுத்தினர். அதனால் அவ்விடத்தில் பளிச்சென்று வெளிச்சம் உண்