பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

291

டாயிற்று. அவ்விடத்தில் ரமாமணியம்மாள், அவளது பெற்றோர், பக்கிரியா பிள்ளை, இடும்பன் சேர்வைகாரன், போயி, நீலலோசனி யம்மாள் முதலியோரைத் தவிர, அன்னியர்களான நான்கு பிரயாணிகளும் இருந்தனர் என்பது முன்னரே சொல்லப்பட்ட தல்லவா. எல்லோரும் எழுந்து கிலி கொண்டு யாரிடத்தில் இருந்து என்ன வஸ்து திருடப்பட்டது என்பதையும், திருடியவன் யாவன் என்பதையும் அறிய ஆவல் கொண்டு துடிதுடித்து நின்றனர். அப்போது நீலலோசனியம்மாள் தனக்கருகில் இருந்த விசாலாக்ஷியம்மாளை நோக்கி மிகுந்த வியப்போடு பேசத் தொடங்கி, “என்ன ஆச்சரியத்தைச் சொல்வேன் அம்மா கொசுக்கடியினால் எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை ஆகையால், நான் அரைத் தூக்கமும் அரை விழிப்புமாகப் படுத்திருந்தேன். யாரோ ஓர் ஆண்பிள்ளை மெதுவாக வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தது போல இருந்தது. அடுத்த நிமிஷம் அவர் என் கையைப் பிடித்து என் கையில் இருந்த வைர மோதிரத்தைக் கழற்றின மாதிரி தோன்றியது. அது கனவு போலவும் இருந்தது; உண்மை போலவும் இருந்தது. என் மனசில் அபாரமான கிலியும் குழப்பமும் உண்டாகிவிட்டது. கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. திருடன் மோதிரத்தைக் கழற்றுகிறான் என்று கத்தலாமா என்று நினைத்தேன். வாய் குழறிப் போய்விட்டது. மோதிரத்தை எடுத்துக் கொண்டு, அவர் கொஞ்சம் அப்பால் நகர்ந்தவுடன், எனக்குத் துணிவு உண்டாயிற்று. நான் உடனே, என் கை விரலைப் பார்த்தேன். மோதிரம் காணப்படவில்லை. நான் உடனே கத்தினேன். அவர் உடனே அப்பால் பாய்ந்து கும்பலில் நுழைந்து கொண்டார்” என்று கூறினாள். அந்த அம்மாளது கை கால்கள் எல்லாம் வெடவெட என்று நடுங்கித் தத்தளித்தன. அவளது தோற்றம் மிகுந்த பீதியையும் குழப்பத்தையும் காண்பித்தது. அவள் கூறிய வரலாற்றைக் கேட்கவே, அங்கிருந்தோர் அனைவரும், “என்ன வேடிக்கை இது! இத்தனை பேர் இருக்கையில் துணிந்து இப்படியும் செய்வார்களா நீங்கள் படுத்திருந்த இடத்தை நன்றாகப் பாருங்கள்” என்றனர். உடனே விசாலாக்ஷியம்மாள் முதலியோர் விளக்கைக் கையில் எடுத்துக் கொண்டு அந்தக் கூடம் முழுதும் தேடிப் பார்த்தனர். நீலலோசனியம்மாள் தனக்குக் கொடுத்த