பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

293

போலவே இன்னொன்று என் கையில் இருந்தது. அதைத் தான் யாரோ ஒருவர் வந்து கழற்றிக் கொண்டார்” என்றாள்.

ஜவான்கள், “கழற்றியது ஆண்பிள்ளை தான் என்பது நிச்சயமாகத் தெரிந்ததா?” என்றனர். நீலலோசனியம்மாள், “ஆம், அது நிச்சயமாகத் தெரிந்தது. அதுவுமன்றி. உங்களை அழைத்து வந்த பெரியவர், இந்தப் பக்கிரியா பிள்ளை முதலியவர்கள் எல்லாம் எனக்கு வேண்டியவர்கள். இவர்கள் இந்தக் காரியத்தைச் செய்தே இருக்கமாட்டார்கள். இவர்களோடு வந்திருக்கும் போயியும், சேர்வைகாரரும் கூட அப்படிச் செய்யக் கூடியவராகத் தோன்றவில்லை. இன்னும் மிகுதியுள்ள பிரயாணிகள் யார் என்பதே எனக்குத் தெரியாது” என்றாள்.

அவள் கூறியதைக் கேட்டுக் கொண்ட ஜவான்கள் விசாலாக்ஷியம்மாள், ரமாமணியம்மாள், அவளது தந்தை, பக்கிரியா பிள்ளை ஆகிய நால்வரையும் தூர விலகி நிற்கச் செய்து விட்டு, போயி, இடும்பன் சேர்வைகாரன், மற்ற பிரயாணிகள் ஆகிய அறுவரையும் சோதனைப் போட்டுப் பார்த்தனர். எவரிடத்திலும் மோதிரம் காணப்படவில்லை. விளக்கை எடுத்துக் கொண்டு தரை முழுதும் தேடிப்பார்த்தனர்; பிறகு அவ்விடத்தில் இருந்த மூட்டைகளை எல்லாம் பரிசோதித்துப் பார்க்க எத்தனித்த காலத்தில் நீலலோசனியம்மாள், “ஐயா! ஏன் வீனில் பிரயாசைப்படுகிறீர்கள். எடுத்தவர்கள் மூட்டையிலா வைக்கப் போகிறார்கள். அது சிறிய மோதிரம். அதை வாயில் போட்டுக்கூட சுலபத்தில் விழுங்கிவிடலாம். அப்படி இருக்க, நீங்கள் அதைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. மோதிரம் போனால் போகிறது. இவ்வளவோடு விட்டு விடுங்கள்” என்றாள்.

அதைக் கேட்ட போலீசார், “இருக்கட்டும் அம்மா! முதலில் முட்டையைப் பார்ப்போம். மூட்டையில் இல்லாவிட்டால், பிறகு இவர்களுடைய வயிற்றையும் சோதனை போட்டுப் பார்த்து விடுவோம்” என்றனர்.

நீலலோசனியம்மாள், “வயிற்றை எப்படி சோதனை போடுகிறது?” என்று வியப்போடு கேட்க, ஜெவான்கள், “அம்மா!