பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

299

மற்ற இடத்தை இந்தக் கண்டிராக்டர் வசம் ஒப்புவித்து விட்டு, உள்பக்கத்தில் இவர்கள் செய்ய வேண்டிய அலங்காரங்களை இன்று செய்யட்டும் என்று விட்டுத் தன்னுடைய வீட்டுக்குப் போய்விட்டாள் போலிருக்கிறது. கண்டிராக்டர் தன் வேலையை முடித்துக் கொண்டு கதவை வெளியில் தாளிட்டுக் கொண்டு போயிருக்கலாம். இந்த மாதிரி அலங்கோலக் கலியாணத்தை நான் இதுவரையிலும் பார்த்ததே இல்லை” என்றார்.

அதைக் கேட்டுக் கொண்ட ரமாமணியின் தகப்பனார் திரும்பி வந்து அந்தத் தகவல்களை எல்லாம் மற்றவரிடம் தெரிவித்ததன்றி, தாம் எல்லோரும் அந்த அகாலவேளையில் வெளியில் நிற்பதை விட கலியானத்திற்கு வந்தவர் போல நடித்து வீட்டிற்குள் போயிருந்தால், எப்படியும் சேர்வைகாரனுடைய ஆட்கள் வருவார்கள் என்றும், தாம் அவர்களை எச்சரித்து ஊருக்குத் திரும்பிப் போய்விடச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

அதை மற்றவர் ஆமோதிக்க, எல்லோரும் உள்ளே சென்று கூடத்தில் காணப்பட்ட விசிப்பலகைகளில் உட்கார்ந்து கொண்டு, ஆட்களின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அவ்வாறு, இரவு பன்னிரண்டு மணி நேரம் வரையில் பார்த்தனர். ஆட்கள் வரவில்லை. எல்லோரும் அலுத்துத் தூங்கிவிட்டனர். ஒரு நாழிகை நேரத்திற்குப் பிறகு திடுதிடென்று பனைமரங்கள் போலிருந்த ஆட்கள் சுமார் இருபதின்மர் உள்ளே நுழைந்துவிட்டனர். எல்லோரும் நன்றாகக் கள் குடித்து மயங்கி வெறி கொண்டு ஆடி விழுந்து கொண்டு வந்து கூடத்தில் படுத்திருந்தவர்கள் மீது பாய்ந்து இடும்பன் சேர்வைகாரன் அதற்கு முன் சொல்லி வைத்திருந்தபடி எல்லோரையும் அங்கஹீனப்படுத்திவிட்டனர். ரமாமணியம்மாள் முதலியோர் அலறியடித்துக் கொண்டு எழுந்து, தாங்கள் மன்னார்குடியார் அல்ல என்று சொன்னதையும் காதில் வாங்காமல் அந்த முரட்டு மனிதர்கள் தாம் கோரிவந்த காரியத்தை நிறைவேற்றி விட்டு, வீட்டில் இருந்து வெளிப்பட, அந்தச் சமயத்தில் அங்கே ஓடிவந்த ஜனங்களும் போலீசாரும் அந்த ஆட்களைப் பிடித்துக் கொண்டனர்.

★ ★ ★