பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

303

நினைவைக் கொள்ளவில்லை என்பதும், ஆனால், அவள் தனது தந்தை வற்புறுத்தியதைத் தடுக்க மாட்டாதவளாய் அந்தக் கலியான ஏற்பாட்டிற்கு இணங்கினாள் என்பதும் முன்னரே கூறப்பட்ட விஷயங்கள். கந்தசாமியைப் பற்றியும், அவனது குடும்பத்தாரைப் பற்றியும் பட்டாபிராம பிள்ளை அபாரமாகப் புகழ்ந்ததைக் கேட்டுக் கேட்டு, அவள் அதிக ஆட்சேபனை எதையும் சொல்லாமல், அந்தக் கலியாணத்திற்கு இசைந்தாளே அன்றி, தனது புருஷனைப் பார்க்க வேண்டும் என்ற வேட்கையைக் கொண்டவளன்று. அவனது குடும்பத்தாருக்கும் தனக்கும் எவ்விதமான பாந்தவ்வியம் ஏற்படப் போகிறது என்பதைப் பற்றி யாவது அவள் சொப்பனத்திலும் நினைத்தவளன்று. தானும் தனது புருஷனும் வெள்ளைக்காரருள் கணவனும் மனைவியும் இருப்பது போல சமயோக்கியதை, சமமரியாதை முதலியவற்றோடு கண்ணியமாகவும் கம்பீரமாகவும் இருக்கப்போவதாக அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். அந்த மனநிலைமையில், கொடிமுல்லையம்மாள் வந்து கூறிய வரலாறு மனோன்மணி யம்மாளின் மனதைக் கலக்கிவிட்டது. வேலாயுதம் பிள்ளையின் வீட்டில் தான் வாழ்க்கைப்பட்டால், அவ்விடத்தில் தனது கண்ணி யமும், அந்தஸ்தும் நிலைக்காவென்ற எண்ணம் அப்போதே அவளது மனத்தில் தோன்றி வதைக்க ஆரம்பித்தது. கந்தசாமி யினிடத்தில் அவளுக்கு அதிக மனப்பற்று ஏற்படாதிருந்தமையால், வெகு சுலபத்தில் அவனும் அவளுக்குக் கசந்து போய்விட்டான். தனது தந்தை அதே இடத்தில் தன்னைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே பிடிவாதமான விருப்பங் கொண்டிருந்தாலும், தான் எப்படியாவது முயன்று அந்த மணம் நடவா விதம் தடுத்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு இரவு பகல் அதே கவலையால் உலப்பப்பட்டவளாய்த் தனது ஊணுறக்கங்களை எல்லாம் வெறுப்பதும் தனது தந்தையின் சொற்களை, அசட்டை செய்வதுமாய் இருந்தாள்.

கொடிமுல்லையம்மாள் முதலியோர் தமது பங்களாவிற்கு வந்ததற்கு மறுநாளாகிய ஞாயிறன்றும், திங்களன்றும் பட்டாபிராம பிள்ளை கந்தசாமியைப் பார்ப்பதற்காக கோமளேசுவரன் பேட்டைக்குப் போனதும், அவன் காணப்படவில்லை என்பதை