பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

311

எனவே மதித்து மிகுந்த பணிவோடு நடந்து வந்தனர். ஆயினும், அந்தக் குடும்பத்தினர் எல்லோரும் பரஸ்பரம் கரை புரண்டு வழிந்த வாஞ்சையாகிய அற்புத சக்தியால் ஒன்றாகச் சேர்த்து ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டிருந்தனர் என்பது எவருக்கும் பளிச்சென்று தெரிவதாய் இருந்தது. எல்லோரும் கீழே இறங்க, பெண்பாலர் இருவரும் ஆண்பாலர் இருப்பதைக் கருதி சிறிது தூரம் விலகித் தலைகுனிந்து தனியாக நின்றனர். நாணம், மடம், அச்சம், பயிர்ப் பென்ற உத்தம லக்ஷணங்கள் அவர்களிடம் கோடி சூரியப்ரகாச மாய் ஜ்வலித்துக் கொண்டிருந்தன. அவர்களிடத்தில் இயற்கை அழகு சம்பூர்ணமாக அமைந்திருந்தன்றி, உயர்ந்த பட்டாடைகள், ஆபரணங்கள் முதலியவற்றாலான செயற்கை வசீகரமும் நிறைந்திருந்தது. அவ்வாறு செல்வம், செழுமை, உத்தம லக்ஷணங்கள், குடும்பத்தில் ஒருவரிடத்தொருவர் எப்படி ஒழுக வேண்டும் என்ற தருமம் முதலியவைகளுக்கு ஓர் உதாரணம் போல இருந்த அவர்களை, அந்த வண்டியில் இருந்து இறங்கிச் சென்ற மற்ற பிரயாணிகள் எல்லோரும் தம்மை மீறி உற்று நோக்கி மிகுந்த வியப்பும், மன மகிழ்ச்சியும் அடைந்தவராய்ச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் வந்து சேர்ந்த பட்டாபிராம பிள்ளை, “வாருங்கள் அண்ணா! வாருங்கள். நமஸ்காரம்” என்று மிகுந்த பயபக்தி விநயத்தோடு கூறித் தனது இருகைகளையும் குவித்து வணங்கினார்.

அவரைக் கண்ட வேலாயுதம் பிள்ளை முதலியோர் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். கந்தசாமி காணாமல் போயிருந்ததைக் குறித்து அவர்கள் எல்லோரும் மிகுந்த கலக்கமும், கவலையும், துயரமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களது முகங்கள் எளிதில் காட்டின ஆனாலும், தங்களது புதிய சம்பந்தி வந்திருக்கிறார் என்ற உணர்ச்சியினால் அவர்கள் எல்லோரும் அந்த ஒரு நிமிஷ நேரம் தமது துயரத்தை மறந்து ஒருவித மகிழ்ச்சியும், முக மலர்ச்சியும் காண்பித்தனர்.

பெண்பாலார் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த நாணமும் அடக்கமும் பணிவும் காட்டித் தலை குனிந்த வண்ணம் கண்ணப்பாவின் பின்னால் மறைந்து கொள்ள, அவ்விடத்திலும், வடி