பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மாயா விநோதப் பரதேசி

என்றும், மன்மதன் என்றும் நினைத்து அவன் கொண்டிருக்கும் இறுமாப்பிற்கு அளவே இல்லை. தான் ஒரு பெரிய மகாராஜனுடைய பெண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவன் உத்தேசித்திருப்பதாக நான் கேள்வியுற்றேன். அவனுக்கு நாம் அதிகமாக வேறொன்றும் செய்ய வேண்டுவதில்லை. இங்கிலீஷ் மருந்துக் கடைகளில் அக்கினித் திராவகம் என்று ஒரு மருந்து இருக்கிறது. அந்தத் திராவகத்தை ஒரு பெரிய சீசா நிறைய வாங்கிக் கொண்டு போய், அதை அப்படியே அவனுடைய முகத்தில் கொட்டி விட்டால், அதுவே போதுமானது. நாம் வேறே ஒன்றும் செய்ய வேண்டாம். அந்தத் திராவகம் மனிதருடைய உடம்பில் பட்டால், அந்த இடம் அப்படியே வெந்து புண்ணாகி அழுகிப் போய்விடும். ஆகையால் அவனுடைய முகம் முழுவதும் பொசுங்கிப் போய் வேகவைத்துத் தோலுரித்த கருணைக் கிழங்கு போல ஆகிவிடும். கண்களும் அநேகமாய் அவிந்து போம். முகம் பார்ப்பதற்கு மகா பயங்கரமாக மாறிப் போகும். அவன் மருந்துகள் போட்டு சொஸ்தப்படுத்திக் கொள்ள அறுமாச காலம் ஆகும். புண் ஆறிப்போனாலும், முகம் வெண்குஷ்டம் கொண்டவனுடைய முகத்தைவிடப் பன்மடங்கு அதிக விகாரமாகவும் அருவருக்கத்தக்கதாகவும் ஆகிவிடும். அதுவே அவனுக்குப் போதுமானது. அதன் பிறகு அவன் தன்னுடைய முகத்தழகை நிலைக் கண்ணாடியில் பார்த்துப் பார்த்து எப்போதும் ஆனந்தம் அடைந்து கொண்டே இருக்கட்டும்.

இடும்பன் சேர்வைகாரன்:- அக்கினித் திராவகத்தை முகத்தில் கொட்டுவது நிரம்பவும் சுலபமான வேலை ஆயிற்றே. இதை நீங்கள் அன்றைய தினமே சொல்லி இருந்தால், இந்நேரம் காரியம் முடிந்திருக்குமே. அதற்காக நான் இரண்டொரு ஆள்களை விட்டிருப்பேனே. இப்போது நம்முடைய ஆள்களுள் சிலர் என்னோடு பட்டனத்தில் இருந்து வந்து விட்டார்கள். மற்றவர்கள் இன்றைய தினம் ரயிலில் ஏறி நாளைய தினம் இங்கே வந்து விடுவார்களே.