பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

41

களும் ஏராளமாக திரவியமும் சம்பாதிக்கத் தக்க ஜீவனோபாயங்களும் ஏற்படுகின்றன. ஆதலால், நம்மவரில் பெரும்பாலோர் அந்த பாஷைக்கே அடிமையாய், நமது சுயபாஷையில் மத சம்பந்தமாகவும் ஆசார ஒழுக்க சம்பந்தமாகவும் எழுதப்பட்டுள்ள தெய்விகமான நூல்களை எல்லாம் குப்பையென மதித்துத் தள்ளி, முற்றிலும் இம்மை சம்பந்தமாகவே எழுதப்பட்டுள்ள இங்கிலீஷ் புஸ்தகங்களைப் படித்து, நாஸ்திகர்களாய் மாறி, ஏராளமாகப் பணந்தேடி இம்மையின் சுகத்தை அபிவிருத்தி செய்வதையே புருஷார்த்தமாக மதித்து, மறுமையை நினையாது, கடவுளைப் பற்றிச் சிந்தியாது கண்டது காட்சி கொண்டது கோலமாகத் திரியும் மிருகங்களின் நிலைமையை அடைந்து கெட்டுப் போகிறார்களே! சகலமான விஷயங்களிலும் தெய்விகத் தன்மை அடைந்துள்ள நமது தேசம் இப்படித்தானா நாசமடைய வேண்டும்! இராஜாங்க சம்பந்தமாகவும், யந்திரசக்திகள் சம்பந்தமாகவும் பிற தேசத்தார் எழுதியுள்ள நூல்களைப் படித்து அவர்களுக்குச் சமமாக நாமும் ஆக வேண்டியதும், நம்முடைய தேசத்தில் நாம் உத்தியோகம் வகிப்பதும் அவசியமான விஷயங்களானாலும், நம்முடைய ஆசார ஒழுக்கங்கள், மதக் கொள்கைகள் முதலியவற்றிலாவது நாம் நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ள நூல்களைக் கற்று அவற்றின்படி நடந்து கொள்ளக் கூடாதா? மனிதனுடைய ஆசை களையும் சுகங்களையும் பெருக்கப் பெருக்க, அவனுடைய துன்பங்களும், மன வேதனையும் ஒன்றுக்குப் பத்தாகப் பெருகிக் கொண்டே போகும் என்பதையும், அவன் தனது ஆசைகளையும் தேவைகளையும் எவ்வளவுக்கு எவ்வளவு சுருக்கிக் கொள்கிறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவன் மன நிம்மதி அடைந்து, தான் பூமியில் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கவும் நிரம்ப அவகாசம் உடையவனாக இருப்பான் என்பதையும் நம்மவர் எத்தனையோ நூல்களில் எழுதி வைத்து இருக்கிறார்களே! அதை எல்லாம், இங்கிலீஷ் படித்த நம்மவர் கனவிலும் எண்ணுகிறார்களா! தாம் இங்கிலீஷ் படித்து நம்முடைய தேசத்தின் அக்ஞான இருளில் இருந்து விலகி மேதாவியாய் உத்தியோகம் வகித்துத் தேடும் பொருளைக் கொண்டு திருப்தி அடையாமல், நமது பெண்