பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மாயா விநோதப் பரதேசி

நமது கொள்கை. சுருங்கச் சொல்லும் இடத்து, நாம் அழிந்து போகக்கூடிய இம்மையை நாடாது நிரந்தரமான மறுமையை நாடுகிறவர்கள். வெள்ளைக்காரர்களோ இம்மையின் சுகத்தையும் மேம்பாட்டையும் விட சிரேஷ்டமான பதவி ஒன்று இருக்கிறது என்பதையே உணராதவர்கள். மோக்ஷ லோகத்தில் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ ஜனங்களுக்கும் பிதாவென்றும், மனிதர் ஒருவருக்கொருவர் சகோதரர் போன்றவர்கள் என்றும், கடவுள் எல்லோரையும் காப்பாற்றுகிறார் என்றும் வெள்ளைக்காரர்களும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆனாலும், மனிதர் இந்த உலகத்தில் உள்ள சகலமான தந்திரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு, இதன் செல்வங்களையும் சுகங்களையும் தாம் எவ்வளவு அதிகமாகப் பெருக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவையும் சாதித்துக் கொண்டு, இரவு பகல் இதே நாட்டமாக இருந்து சந்தோஷமாயும் க்ஷேமமாகவும் அமோகமான செல்வத்தோடும் இம்மைச் சுகத்தைப் பூர்த்தியாக அனுபவிக்க வேண்டும் என்பதும், கூடுமானால், ஒவ்வொரு வெள்ளைக்காரனும் ஒவ்வொரு ராஜ்யம் சம்பாதித்துக் கொண்டு அதற்குச் சக்கரவர்த்தியாக இருக்க வேண்டும் என்பதையுமே அவர்கள் மோக்ஷத்தைவிட மேலான பதவியாகக் கருதுகிறார்கள். அவர்களுடைய ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்து கடவுள் ஆசீர்வதித்து எப்போதும் அவர்களுடைய இம்மைச் சுகமும் மேம்பாடும் நீடித்திருக்கும்படி செய்து கொண்டு மோக்ஷ லோகத்தில் இருக்கிறார் என்பதைத் தவிர, அவர்களுக்கும், மோலோகத்திற்கும் வேறு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் எண்ணுவதாகத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட அவர்களுடைய வேதாந்த தத்துவமும் கொள்கைகளும் பூர்த்தியாவதற்கு அனுகூலமாக அவர்கள் பற்பல யந்திர தந்திர விவகார சாஸ்திரங்களையும் லெளகீகமான இலக்கிய நூல்களையும் உற்பத்தி செய்திருக்கிறார்கள். நம்மவர்கள் உலகப்பற்றை விலக்கி, ஏழ்மையையும், மனத் திருப்தியையும் ஒப்பற்ற திரவியமாகக் கொண்டு, தான் என்பதை மறந்து, கடவுளின் சிருஷ்டியில் இரண்டறக் கலந்து, அவரை அடைய வேண்டும் என்ற பக்திப் பெருக்காகிய அமிர்த ஊற்றைச் சொரிந்து, பரிசுத்த மூர்த்திகளாய்