பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

3

இரண்டாம் பாகம்
மாயா விநோதப் பரதேசி

6-வது அதிகாரம் தொடர்ச்சி....

உடனே வடிவாம்பாள் மிருதுவான குரலில் பேசத் தொடங்கி, "என்ன கண்ணம்மா! இங்கே யாரோ படுத்திருக்கிறார்களே! நம்மை எதற்காக சுவாமியார் ஐயா இங்கே அனுப்பினார்கள் என்பது தெரியவில்லையே!" என்றாள்.

அதைக் கேட்ட கண்ணப்பா நிரம்பவும் ஆழ்ந்து யோசனை செய்தவனாய்ச் சிறிது நேரம் மௌனமாக நின்ற பிறகு, "எனக்கும் அதுதான் விளங்கவில்லை. ஆனால் நம்முடைய சுவாமியார் எதையும் மூடத்தனமாகச் செய்கிறவர் அல்ல. ஏதோ முக்கியமான கருத்தோடு தான் அவர் நம்மை இங்கே அனுப்பி இருப்பார். எல்லாவற்றிற்கும் இதோ படுத்திருக்கும் மனிதரை நான் கூப்பிட்டுப் பார்க்கிறேன்" என்று கூறிய வண்ணம், "யார் ஐயா கட்டிலில் படித்திருக்கிறது?" என்று தணிவான குரலில் வினவினான். அதற்கு எவ்விதமான மறுமொழியும் கிடைக்கவில்லை. படுத்திருந்த மனிதர் அசைவதாகவும் தோன்றவில்லை. உடனே கண்ணப்பா "இருக்கட்டும். நான் கட்டிலண்டை நெருங்கிப் போய், படுத்திருப்பது யார் என்று பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கூறிய வண்ணம் வடிவாம்பாளை விட்டுப் பிரிந்து தனியாகக் கட்டிலண்டை போய்த் தலைப் பக்கத்தில் நெருங்கி நின்று, படுத்திருந்த மனிதருக்குப் பக்கத்தில் தனது முகத்தைக் கொண்டு போய் வைத்துக் கொண்டு உற்றுக் கவனித்தான். அவ்வாறு அவன் சிறிது நேரம் இருந்தபின் நிமிர்ந்து வடிவாம்பாளை நோக்கி, "மனிதர் மூச்சு விடும் சப்தம் உண்டாகவில்லையே! இது நிரம்பவும் விநோதமாக இருக்கிறதே! எவ்வளவுதான் மனிதர் கடுமையாகத் தூங்கினாலும், முகத்தை மூடிக் கொண்டு இருந்தாலும், மூச்சுவிடும் ஓசை கொஞ்சமாவது