பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

மாயா விநோதப் பரதேசி

கொருவர் உண்மையான பற்றும் சம்பந்தமும் இல்லாமல், அவரவர்கள் ஒவ்வொரு தொழிலைச் செய்து நினைத்த இடத்திற்குப் போய் வந்து கொண்டிருப்பது தான் குடும்பத்திற்குக் கண்ணியமாகுமா? குடும்பத்தில் உள்ள எல்லோரையும் ஒன்றுபடுத்தி, ஒருவருக்கொருவர் பந்தத்தையும் பாசத்தையும் வளர்ப்பது குடும்பத்தின் தலைவியான தாயல்லவா. அவள் தனது காரியத்தை மாத்திரம் பார்த்துக் கொண்டு வெளியில் போய் வந்து கொண்டிருந்தால், அவளிடம் குழந்தைகளுக்குத் தமது தாய் என்ற மதிப்பாவது வாஞ்சையாவது ஏற்படுமா? அல்லது, அன்னிய புருஷர்களின் இடையில் சென்று உத்தியோகம் பார்த்துவிட்டு வரும் மனைவி வீட்டிற்கு வந்தாலும், அவள் தனது உத்தியோகத் தொல்லையையும் கவலையையும் கொண்டிருக்கமாட்டாளா? அவள் தனது கணவன், குழந்தைகள் முதலியோருடன் அன்பாக வார்த்தையாடி அவர்களை சந்தோஷிப்பிக்கத்தான், அவளுக்கு அவகாசமாவது, பொறுமை யாவது இருக்குமா? மனிதன் ஜீவனோபாயத்தின் பொருட்டு வெளியில் அலைந்து பகல் முழுவதும் உழைத்துவிட்டு வீட்டிற்கு வந்தால், வாஞ்சையான மனைவி அவனை உள்ளார்ந்த அன்போடு உபசரித்து உவப்போடு அன்னம் அளித்து அவனுக்குப் பல வகையில் இன்பங் கொடுப்பதால், அவன் தனது அன்றைய உழைப்பை மறந்து, மறுநாளைய உழைப்பையும் ஊக்கத்தோடும் சந்தோஷத்தோடும் செய்வதற்குத்தக்க சக்தியும் அடைகிறான் என்பது ஒவ்வொருவரும் அனுபவத்தில் கண்ட விஷயம் அல்லவா. மனிதன் தனது ஆயிசு காலபரியந்தம் உழைத்துப் பணம் தேடுவது எதற்காக? அவன் தனது உயிர்க்குயிரான மனைவியை நிழலில் வைத்து அவள் மனக் கவலையும் தேகத் துன்பமும் அனுபவியாமல் அவளை சவரக்ஷித்து, அவளால் தானும் தமது குழந்தைகளும் பலவகையில் சுகப்பட்டு, ஆனந்தமாகக் காலங்கழிப்பது மனிதன் உழைத்துப் பணந்தேடுவதன் ஒரு முக்கிய நோக்கம் அல்லவா. அப்படிச் செய்யாமல் எல்லோரும் பகல் முழுதும் மூலைக்கு ஒருவராய்ச் சென்று பணத்தைத் தேடி வந்து உண்மையான குடும்ப வாழ்க்கையும் பரஸ்பர வாஞ்சையும் இன்னதென்பதைத்