பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மாயா விநோதப் பரதேசி

செல்வம் இருப்பதற்கு இவள் தமிழ்ப்பாஷை, சமஸ்கிருத பாஷை முதலிய சுதேச பாஷைகளை நன்றாகக் கற்று, அவற்றில் உள்ள நூல்களைப் படித்துப் பாண்டித்தியம் அடைந்திருந்தால், இவள் ஸ்திரீ தர்மம் இன்னதென்பதையும், எப்படிப்பட்ட ஆசார் ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நன்றாக உணர்ந்து உண்மையான ஞானம் பெற்று ஒப்பற்ற குணமணியாகவும் இன்பக் களஞ்சியமாகவும் தோன்றுவாள். இவளுடைய இம்மை வாழ்க்கையும் க்ஷேமகரமாகவும் இன்பகரமாகவும் இருக்கும். இவளை மணக்கும் புருஷனும் இவளிடம் மதிப்பு, மரியாதை, வாஞ்சை முதலியவை நிறைந்தவனாய் ஒழுகுவான். அப்படி இன்றி, இவள் இங்கிலீஷ் பட்டம் பெறுவதற்காக, உபயோகமற்ற குப்பைகளாகிய மேல்நாட்டுப் புஸ்தகங்களை நெட்டுருப் போட்டுத் தன் உடம்பையும், உயிரையும் பருகி, முடிவில் திடமான அறிவைப் பொறாமல், நற்குண நல்லொழுக்கம் ஸ்திரீ தர்மம் முதலிய எதையும் சிறிதும் தெரிந்து கொள்ளாமல், தனது வாழ்க்கைத் துணையான புருஷனோடு ஒன்றுபட்டு வாழும் மர்மங்களை உணராது, தான் என்ற ஆணவமும், வீண் பெருமையும் நிறைந்து, ஆயிசுகாலம் முடிய துக்கமும் துன்பமும் அனுபவித்து, உலகுக்கும் பயன்படாது தனக்கும் பயன்படாது நடைப்பிணமாய் இருந்து மடிவதே இவளுடைய முடிவு. இப்படிப்பட்ட நிலைமைக்கு இவளைக் கொண்டு வந்ததற்கு இவளது தந்தையே காரண பூதரான மனிதரன்றி. இவள் மீது குற்றங் கூறுவது பொருந்தாது. வீட்டில் பெற்றோர் பெரியோர் குழந்தைகளை எந்த வழியில் திருப்பி விடுகிறார்களோ அந்த வழியில் குழந்தைகள் செல்கிறார்கள். சட்டைநாத பிள்ளை எவ்வளவுதான் துஷ்டனாகவும் துன்மார்க்கத்தில் செல்லுகிறவனாகவும் இருந்தும், நல்ல வேளையாக அவன் வடிவாம்பாளை இப்படிப்பட்ட துறையில் விடாமல், சன்மார்க்கமும், நல்ல குணங்களும் பழகும்படி செய்து வைத்தான். இந்தப் பட்டாபிராம பிள்ளை நல்ல யோக்கியமான மனிதராகவும், படிப்பாளியாகவும், அறிவாளியாகவும் இருந்தும், நம்முடைய பாஷையில் உள்ள நூல்களின் பெருமையையும், நமது ஸ்திரீகள் நடந்து கொள்ள