பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

65

தெரிந்திருக்கலாம். அவருடைய தம்பி முதலியோர் நம்மிடம் பகை வைத்திருப்பது சகஜமே. நம்முடைய பகைவர் ஏதாவது கெட்ட கருத்தோடு அவ்வாறு எங்கள் உறவினர் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கலாம். நீங்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பெண்ணினிடம் எங்களைப் பற்றி ஏதாவது அவதூறு சொல்லி அவளது மனதைக் கலைத்து இந்தக் கலியாணத்தை நிறுத்தவோ, அல்லது, பெண்ணுக்கு ஏதாவது கெடுதல் செய்யவோ அவர்கள் வந்திருக்கலாம் என்ற சந்தேகமே தோன்றுகிறது. நீங்கள் எச்சரிப்பாக நடந்துகொண்டு, முடிவைக் கடிதத்தின் மூலம் எழுதுங்கள்' என்று தகப்பனார் எழுதி இருக்கிறார். நான் பெண் வேஷந் தரித்துக் கொண்டு இங்கே வந்தவுடன், இவர் என் தகப்பனாருக்குத் தந்தி அனுப்புவார் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. இவருடைய தந்தியைப் பார்த்து என் தகப்பனார் சட்டைநாத பிள்ளை மீது சந்தேகித்தது சகஜமாக யாரும் செய்யக்கூடிய காரியமே. அப்படி அவர் சந்தேகித்து மறுதந்தி கொடுத்தது பெரிய விபரீதத்தை விளைவித்து விட்டது. என் தகப்பனாருடைய தந்தியில் உள்ள விஷயத்தைப் படித்த பிறகு மனோன்மணி அம்மாளும், அதுவே தான் உண்மையாக இருக்கும் என்று நம்பி இருப்பாள். ஆதலால், நான் சட்டைநாத பிள்ளையைச் சேர்ந்த யாரோ ஒரு பெண்பிள்ளை என்றும், வேண்டும் என்றே நான் அவளுடைய மாமியார் வீட்டாரைப்பற்றி அவதூறாகப் பேசியதாகவும் எண்ணிக் கொள்வது நிச்சயம். இவளுக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணையின் விவரம் முழுதையும் இவள் அநேகமாய்த் தன் தகப்பனாரிடம் வெளியிட்டாலும் வெளியிடலாம். ஆனால் இவர்கள் இருவரும், என்னுடைய வார்த்தைகளை அவ்வளவாக மதிக்கவும் மாட்டார்கள்; அவற்றைக் கொண்டே இந்தக் கலியானத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைக்கவும் மாட்டார்கள். நான் எதிரியைச் சேர்ந்த மனிஷி என்று இவர்கள் நினைத்திருக்கும் வரையில், இவர்களுக்கு இந்தக் கலியானத்தை நிறுத்தும் உத்தேசம் ஏற்படாது. ஆனால் நான் கந்தசாமி என்ற உண்மையைக் கோபாலசாமி வெளியிட்டிருந்தால், அதன் பிறகு இவர்களுடைய மனம் நிரம்பவும் கலக்கத்தை அடைவது

மா.வி.ப.II-5