பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

5

அதைக் கேட்ட வடிவாம்பாளும் முற்றிலும் திகைப்பும் கலக்கமும் அடைந்து தத்தளித்துப் போயினள். கண்ணப்பா துப்பட்டியை விலக்கின போதே அவளும் அந்த முகத்தை நோக்கினாள். தூரப்பார்வையிலேயே, அது சாமியாரது முகம் போல இருந்ததை அவளும் கவனித்தாள். ஆனாலும் தான் காண்பது மெய்யோ பொய்யோ என்று அவள் சந்தேகித்துக் கலங்கியிருந்த தருணத்தில் கண்ணப்பாவும் அதே விதமான செய்தியைக் கூறவே, அவளது அறிவு கலங்கவும் சிரம் சுழலவும் ஆரம்பித்தன. தாம் திகம்பரசாமியாரை விட்டு நேராகப் படியின் வழியாய் அந்த அறைக்குள் வந்திருக்க, தங்களுக்கு முன் சாமியார் எப்படி அங்கே வந்து கட்டிலில் படுத்திருக்க முடியும் என்ற சந்தேகம் தோன்றி அவளது மனதைக் குழப்பிவிட்டது. அவள் நிரம்பவும் ஆவலோடு விசையாக நடந்து கண்ணப்பா இருந்த இடத்தை அணுகி, கட்டிலில் காணப்பட்ட முகத்தை உற்று நோக்கினாள். அந்த முகத்திற்கும் சாமியாரது முகத்திற்கும் எள்ளளவும் பேதமே காணப்படவில்லை. அந்த முகத்தின் தோற்றம் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது எப்படி இருக்குமோ அப்படியே காணப்பட்டது. கண்ணப்பா, வடிவாம்பாள் ஆகிய இருவரும் தாம் அதற்குமேல் என்ன செய்வது என்பதையும், படுத்திருப்பது உண்மையில் யார் என்பதையும் நிச்சயிக்க மாட்டாதவர்களாய்ச் சிறிது நேரம் அப்படியே ஓய்ந்து நின்றனர். மறுபடியும் கண்ணப்பா தணிவான குரலில், "சுவாமீ! - சுவாமீ!!" என்று இரண்டு தரம் கூப்பிட்டுப் பார்த்தான். மறுமொழி கிடைக்கவில்லை. அவன் உடனே கட்டிலண்டை நெருங்கித் தனது கையை மெதுவாக அந்த முகத்தண்டை கொண்டுபோய்க் கன்னத்தின் மேல் வைத்தான். வைக்கவே, அங்கே இருந்தது உயிரற்ற ஒரு புதுமை என்பது உடனே தெரிந்து போயிற்று. கன்னம் தொடுவதற்கு மிருதுவாக இருந்தது ஆனாலும், அது உயிரற்ற வஸ்து என்பது சந்தேகமறத் தெரிந்தது. அவன் உடனே திடுக்கிட்டுப் பெரிதும் வியப்பும் களிப்பும் அடைந்து, "ஆகா! நாம் ஏமாறிப் போனோமே! இது உயிரற்ற பொம்மை அல்லவா! இதைக் கண்டு நாம் உண்மையாகவே சுவாமியார் படுத்திருப்பதாக அல்லவா நினைத்து விட்டோம். ஆகா! என்ன நம்முடைய மதியீனம்!" என்றான்.