பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

73

அவளது சொற்களைக் கேட்ட கந்தசாமி நிரம்பவும் பிரமிப்படைந்து ஸ்தம்பித்து அப்படியே உட்கார்ந்து போனான். அவனது மனதில் பலவகைப்பட்ட எண்ணங்களும் சந்தேகங்களும் மின்னல்கள் போல மளமளவென்று தோன்றி மறைய ஆரம்பித்தன. வேலைக்காரி என்ன சொல்லப் போகிறாள் என்று மிகுந்த ஆவலோடு அவளது முகத்தைப் பார்த்தபடி மௌனமாக இருக்க, உடனே வேலைக்காரி, "அம்மா! இந்த பங்களாவின் எஜமானருக்கு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு சொத்து இருக்கிறது. அவருக்கு வயது சுமார் இருபத்தைந்து தான் இருக்கும். பார்வைக்கு அவர் அழகாகவே இருப்பார். அவருக்குத் தாய், தகப்பன், சம்சாரம் முதலிய பந்துக்கள் யாரும் இல்லை. அவர் ஏகாங்கி. நீங்கள் பள்ளிக்கூடத்திற்குப் போன காலத்தில், அவர் உங்களைப் பலதடவைகளில் பார்க்க நேர்ந்ததாம். உங்கள் மேல் அவருக்கு நிரம்பவும் பிரியம் ஏற்பட்டு விட்டதாம். எப்படியாவது உங்களைக் கொண்டு வந்து, தாம் கலியாணம் செய்து கொண்டு இவ்வளவு அபாரமான செல்வத்திற்கும் உங்களை எஜமானியாக்க வேண்டும் என்ற ஆசை அவருடைய மனதில் உண்டாகி விட்டதாம். தாம் ஏகாங்கியாய் இருப்பதால், நேரில் உங்களுடைய தகப்பனாரிடம் கேட்டு அவருடைய சம்மதியைப் பெறமுடியா தென்று நினைத்து, அவர் ரகசியமாகப் பல ஆள்களை அனுப்பி உங்களை இவ்விடத்திற்குக் கொண்டுவரச் செய்திருக்கிறார். நாளைய தினம் காலையில் உங்களுக்கும் அவருக்கும் கலியாணம் நடக்கப் போகிறது. இது தான் உண்மையான வரலாறு" என்றாள்.

அவள் சொன்ன வரலாற்றைக் கேட்ட கந்தசாமி விவரிக்க இயலாத அபாரமான வியப்பும் பிரமிப்பும் திகிலும் அடைந்தவனாய்த் தான் என்ன மறுமொழி கூறுவதென்பதை அறியாமல் சிறிது நேரம் அப்படியே ஓய்ந்து உட்கார்ந்து போய்விட்டான். மனோன்மணியின் மீது மோகங்கொண்ட யாரோ ஒரு பெரிய மனிதன் திருட்டுத்தனமாகவும் பலவந்தமாகவும் அவளை அபகரித்து வரும்படி ஆள்களை அனுப்ப, அவர்கள் தன்னை மனோன்மணி என்று நினைத்து ஆள் மாறாட்டமாகத் தன்னை