பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மாயா விநோதப் பரதேசி

சிந்தனைக் கடலில் ஆழ்ந்து போயிருந்தது. "நேற்று இரவில் என்னை முரட்டு மனிதர்கள் எடுக்க வந்த காலத்தில், கீழே இருந்த எல்லோரையும் கட்டி அப்படி இப்படி அசையமாட்டாமலும் கூச்சலிடமாட்டாமலும் செய்து விட்டு வந்திருப்பதாகச் சொன்னது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அநேகமாய்ப் பட்டாபிராம பிள்ளையும், என் சிநேகிதனான கோபாலசாமியும் கூட, அதே கதிக்குத்தான் ஆளாகி இருக்க வேண்டும். மனோன்மணியம்மாள் ஒருவேளை தனியான ஓர் அறையில் படுத்துக் கொண்டிருக்கலாம். இந்த முரட்டு மனிதர்கள் அந்த அறையைத் திறந்து பார்க்காமல் நேராக நான் இருந்த அறைக்கே வந்திருக்கலாம். மனோன்மணியம்மாளின் படுக்கை அறையில் அவர்கள் என்னைச் சிறைப்படுத்தி இருந்தார்கள் அல்லவா. அந்த அறையில்தான் எப்போதும் மனோன்மணியம்மாள் சயனித்துக் கொள்வதென்பதை எப்படியோ தெரிந்து கொண்ட இந்த முரடர்கள் நேராக அந்த அறைக்கு வந்திருக்கலாம். அவளை அவர்கள் பார்த்தே இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. அந்த இடத்தில் படுத்திருந்த என்னைப் பார்த்து இவர்கள் மனோன்மணியம்மாள் என்று நினைத்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நடந்ததும் நன்மையாகவே தோன்றுகிறது. மனோன்மணியம்மாளை இவர்கள் வேறே இடத்தில் பார்த்திருந்தால், அவளையே தூக்கிக் கொண்டு வந்திருப்பார்கள். அப்படிச் செய்யாமல் என்னிடம் வந்ததில் இருந்து, இவர்கள் மனோன்மணியைப் பார்க்கவில்லை என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. இவர்கள் அவளைத் தவிர, மற்றவரைத்தான் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதும் நிச்சயமாகத் தெரிகிறது. அந்த விஷயத்திலும் அவள் இந்த துஷ்டர்களுடைய உபத்திரவத்திற்கு இலக்காகாமல் தப்பியது அதிர்ஷ்ட வசத்தினால்தான். நம்முடைய கோபாலசாமியின் நிலைமைதான் நிரம்பவும் தர்மசங்கடமானதாக இருக்கும். பெண் வேஷத்தோடு உள்ளே இருந்த என்னை யாரோ முரடர்கள் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்றால், அவனுடைய நிலைமை என்னவாக இருக்கும். திருடனுக்குத் தேள் கொட்டிய நிலைமை போலவேதான் அது இருக்கும். அவன் என்னைத்