பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

85

தனது பொழுதைப் போக்கியதுமன்றி, வேலைக்காரி கந்தசாமி இருந்த அந்தப்புரத்தின் கதவைத்திறந்து கொண்டு உள்ளே வந்த சமயத்தில், கதவுத் திறப்பின் வழியாக எட்டி உட்புறத்தில் தனது பார்வையைச் செலுத்தி கட்டிலின் மேல் உட்கார்ந்திருந்த சுந்தர வடிவத்தின் பின்னழகைக் கண்டு மதிமயங்கி, உணர்வு கலங்கி காதற் கனலிற்கு இரையாய், உயிர் அழிந்து ஓய்வற்று இருக்கை கொள்ளாமல் பைத்தியங் கொண்டவன் போல அங்கும் இங்கும் உலாவுவதும், உட்காருவதும் பிரமித்து வெறு வெளியை நோக்கியபடி நின்று போலி மனோன்மணியம்மாளின் பின் அழகைத் தன் அகக்கண்ணினால் பாவித்து ஒரே நிலையில் நிற்பதுமாய் அன்றைய பொழுதைப் போக்கினான். கந்தருவ மாது போலத் தோன்றிய மகா சிலாக்கியமான வனப்பு வழிந்த அந்த மங்கை அவ்வளவு எளிதில் தனக்கு வசியப்பட்டுப் போனதை நினைத்து நினைத்து அவன் உருகிப் பாகாய் ஓடிக் கொண்டிருந்தான்.

மறுநாட் காலையில் கலியாண ஏற்பாடுகள் யாவும் சித்தமாகத் தயாரிக்கப்பட்டிருந்தன. மூன்றாவது கட்டின் முற்றத்தில் கலியாண மண்டபம் அழகாக ஜோடிக்கப் பட்டிருந்தது. அந்தக் கட்டு முழுதும் வாழை மரங்கள், மாவிலைத் தோரணங்கள் முதலிய அலங்காரங்கள் எல்லாம் காணப்பட்டன. இடும்பன் சேர்வைகாரனும், அவனது கையாட்கள் சுமார் முப்பதின்மரும் வண்ணானிடம் இரவல் வாங்கிய ஜரிகை வேஷ்டிகள், பட்டுச் சொக்காய்கள், ஜரிகைத் தலைப்பாகைகள், ஜரிகை உருமாலைகள் முதலியவற்றைத் தரித்து விஜயம் செய்து தாழ்வாரங்களிலும் கூடங்களிலும் கண்ணியமாக வீற்றிருந்தனர். அவர்களுள் ஒருவன் புரோகிதரைப் போலப் பூணூல் முதலியவற்றை அணிந்து கையில் நாணல் பில் முதலிய வைதிக அங்கங்களோடு கலியாண மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான். இரண்டாவது கட்டில் இருந்தபடி வாத்தியக்காரர்கள் மேளம் வாசிக்கத் தொடங்கினர். மாசிலாமணி தன்னை நிரம்பவும் படாடோபமாக அலங்கரித்துக் கொண்டு, தனது கட்டைக்கால் வெளியில் தெரியாதபடி இடுப்பு வஸ்திரத்தால் தனது கால்களை மறைத்துக் கொண்டு தோன்றி மணையின் மேல் அமர்ந்தான். முகூர்த்த