பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மாயா விநோதப் பரதேசி

காலம் வந்து விட்டதென்று புரோகிதர் கூறி அவசரப்படுத்தவே, வேலைக்காரிகளுள் இருவர் மேன்மாடத்திற்குச் சென்று போலி மனோன்மணியை அழைத்து வரப்போயினர். அன்றைய தினம் காலையிலேயே வேலைக்காரிகளின் வற்புறுத்தலுக் கிணங்கி கந்தசாமி உயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்து, தலைமுதல் கால் வரையில் வைர கற்களும், ஜரிகைகளும், பட்டும் தகத்தகாயமாக மின்ன அப்ஸர ஸ்திரீபோல விளங்கிக் கொண்டிருந்தான். ஆதலால், அவன் வேலைக்காரிகளால் நடத்தப்பட்டு, குனிந்த தலையோடு நாணிக் கோணிக் கட்டை விரல்களைப் பார்த்தபடி அன்ன தடை நடந்து கலியாண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான். அவனை இப்போது நன்றாகப் பார்த்த மாசிலாமணி சகிக்க முடியாத மனப் பூரிப்பும் பரவசமும் அடைந்து ஆனந்த மயமாக வீற்றிருந்தான். அவனது இருதயமும் மார்பும் சந்தோஷப் பெருக்கைத் தாங்க மாட்டாது படீரென்று வெடித்துப் போய் விடுமோ என்று நினைக்கத்தக்க விபரீத நிலைமையில் இருந்தன. அவனது தேகம் விண்ணில் பறந்து சுவர்க்கலோகத்தை தரிசித்து வருவது போலத் தோன்றியது. அப்போதைக்கு அப்போது அவன் தனது கடைக் கண்ணால், அந்த இன்பவடிவத்தைப் பார்த்துப் பார்த்து உவகைப் பூத்துப் பேரின்ப வசத்தனாய் விளங்கினான். கந்தசாமி அரை மனதோடு அந்தக் கலியாணத்திற்கு இணங்குகிறவன் போல நடித்தபடி நாணிக்கோணி மணை மீது உட்கார்ந்து தலை குனிந்து தங்க விக்கிரகம் போல வீற்றிருந்தான். கலியாணம் கால்நாழிகை காலத்தில் முடிவடைந்தது. மாசிலாமணி திருமாங்கலியத்தைப் போலி மனோன்மணியம்மாளின் கழுத்தில் கட்டி முடிச்சுப் போட்டான். மேளக்காரர்கள் டும் டும் டும் டும் என்று அபாரமாக முழக்கி, அந்த முடிவைப் பாராட்டி ஆனந்தக் களிப்பும் மங்களமும் பாடி நிறுத்தினார்கள். மாசிலாமணி அதற்கு முன்னரே தயாரித்து ஆயத்தமாக வைத்திருந்த பெருத்த பெருத்த சன்மானங்களை எடுத்து புரோகிதர், இடும்பன் சேர்வைகாரன், அவனது ஆட்கள், மேளக்காரர்கள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் முதலிய எல்லோருக்கும் வழங்கினான். உடனே பெண் தனது அந்தப்புரத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்.