பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

91

பங்களாவில் இருந்த டலாயத்துகளையும் ஏமாற்றி விட்டு வீட்டிற்குள் போயிருந்தது கூட எனக்கு அவ்வளவு ஆச்சரியமாகத் தோன்றவில்லை. இந்தப் பெண் இங்கே வந்த பிறகு, நம்முடைய வேலைக்காரி இவளிடம் நம்முடைய கருத்தை வெளியிட்டாள் அல்லவா. நான் மனோன்மணியைக் கண்டு ஆசைப்பட்டு, அவளைக் கலியாணம் செய்து கொள்ள எண்ணுகிறேன் என்பதை அறிந்தவுடன், இவள் என்ன செய்திருக்க வேண்டியது? தான் மனோன்மணி அல்ல என்றும், தான் அவர்களுடைய பங்களாவிற்கு வந்திருந்த வேறோர் அன்னிய மனுஷி என்றும் இவள் உடனே வேலைக்காரியிடம் தெரிவித்திருக்க வேண்டாமா? தனக்கு நல்ல இடம் வாய்த்ததென்று நினைத்து இவள் பூடகமாகவே இருந்து, தான் மனோன்மணி என்று கடைசி வரையில் நடந்து இந்தக் கலியாணத்தை முடித்துக் கொண்டிருக் கிறாளே! இவள் செய்ததல்லவா சாமர்த்தியம்! இதைத்தான் கள்ளனைக் குள்ளன் பாய்ந்ததென்று சொல்ல வேண்டும்" என்றான்.

இ. சேர்வைகாரன்:- நம்முடைய வேலைக்காரி சொன்ன வரலாறுகளை எல்லாம் கேட்டுக் கொண்டு இந்தப் பெண் ஒன்றையும் சொல்லாமல் பேசாதிருந்தாளா? அல்லது, நான் தான் மனோன்மணியம்மாள் என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாளா? ஒருவேளை வேலைக்காரி இவளிடம், மனோன் மணியம்மாளின் மேல் நீங்கள் ஆசைப்பட்டு அவளைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் கருத்தோடு கொண்டு வந்திருக்கிறீர்கள் என்ற வரலாற்றையே தெளிவாகச் சொல்ல வில்லையோ என்னவோ.

மாசிலாமணி:- அதெல்லாம் இல்லை. வேலைக்காரி எத்தனையோ தடவை இந்தப் பெண்ணினிடம் போய்ப் பேசி விட்டு எனக்குச் சமாசாரம் கொண்டு வந்திருக்கிறாள். சென்னை கலெக்டர் பட்டாபிராம பிள்ளையின் மகளான மனோன்மணியே இவள் என்று நாம் நினைத்திருக்கிறோம் என்ற விஷயம் இவளுக்கு நன்றாகத் தெரியும். இவளை நாம் ஆள்மாறாட்டமாகக் கொண்டு வந்து விட்டோம் என்பது இவளுக்குத் தெரியாதே.