பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 181 ஆனாலும், அவள் தனது தந்தையை அழைத்துக் கொண்டு வந்து விடப் போகிறாளே என்ற அச்சத்தைக் கொண்டவளாய்த் தனது வாயைத் திறந்தாள். ஒரு கவளம் ஆகாரம் தொண்டை வரையில் சென்றது. வேப்பங்காயை விழுங்குகிறவர்களுக்கு எப்படிக் குமட்டலும் வாந்தியும் உண்டாகுமோ அம்மாதிரி அவள் உடனே உவ்வா. உவ்வா என்று பலத்த ஓசையோடு வாந்தி எடுக்கத் தொடங்கினாள். அதைக் கண்ட வேலைக்காரி பெருத்த பீதியும் நடுக்கமும் அடைந்து, சாதம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டு, சுடச்சுட இருந்த பாலை எடுத்து, "இந்தப் பாலையாவது சாப்பிடம்மா இது வாந்தி செய்யாது" என்று அன்போடு கூறி அதை வாயில் பெய்ய, மனோன்மணியம்மாள் அதை மாத்திரம் நாலைந்து வாய் வாங்கி விழுங்கிய பின் அதுவும் வேண்டாம் என்று கையால் சைகை செய்து தடுத்துவிட்டு, கண்களை மூடிக் கொண்டு அப்படியே சோர்ந்து படுத்து விட்டாள். உடனே அவளது உடம்பு குபிரென்று வியர்த்துத் தண்ணிர் மயமாகி விட்டது. அவளது உடம்பின் ஒவ்வோர் அணுவும் காற்றிலசையும் மாந்தளிர் போல நடுங்கியது நன்றாகத் தெரிந்தது. அதற்கு மேல் அவளைத் தான் உடத்திரவிக்கக் கூடாதென்று நினைத்தவளாய் வேலைக்காரி மிகுதி இருந்த ஆகாரவஸ்துக்களை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டுத் தனது போஜனத்தை முடித்துக் கொண்டு, அந்த விடுதியிலேயே வந்து படுத்துக் கொண்டு அந்த இரவைக் கழித்தாள். மறுநாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்த வேலைக்காரி மனோன்மணியம்மாளை நோக்கினாள். அவளது நிலைமை முதல் நாளில் இருந்ததைவிட அதிகப் பரிதாபகரமாகவும் கேவலமாகவும் இருந்தது. அவளது தேகம் துரும்பு போல மெலிந்து தளர்வடைந்து சோர்ந்து போயிருந்தது. வேலைக்காரி அவளைத் தட்டி எழுப்பிப் பார்த்தாள். அவள் எழுந்திருக்கவுமில்லை; பேசவுமில்லை. வேலைக்காரி மிகுந்த கலவரமடைந்து, தான் அதற்கு மேல் சும்மா இருப்பது சரியல்ல என்று நினைத்து உடனே பட்டாபிராம பிள்ளையிடம் சென்று அந்தச் செய்தியைத் தெரிவித்தாள். அவர் நிரம்பவும் கவலை கொண்டவராய் உடனே புறப்பட்டு மனோன்மணியம்மாளது விடுதியை அடைந்து கட்டிலண்டை சென்று பார்த்தார். தமது