பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 195 அவளுக்கு ஆறுதல் கூறியும், எப்போதும் குளிர்ச்சியான காற்று அவள் மீது படும்படி விசிறி கொண்டு வீசியும், அவளை ஒரு குழந்தையைப் பாதுகாப்பது போல நிரம்பவும் அக்கறையோடு பாதுகாத்து வந்தாள். எப்படியும் கந்தசாமி வெகு சீக்கிரத்தில் அகப்பட்டு விடுவார் என்றும், அதுவரையில் தான் மனோன்மணி யம்மாளைக் காப்பாற்றி விட்டால், பிறகு அவள் பிழைத்துத் தேறி விடுவாள் என்றும் எண்ணியபடி வடிவாம்பாள், மகாவிஷ்ணுவின் பக்கத்திலிருந்து அவருக்கு எந்தச் சமயத்தில் எவ்விதம் இருப்பது சுகமோ அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளும் ஆதிசேஷன் போல மகா திறமையாகவும் அத்யந்த வாஞ்சையோடும் நடந்து கொண்டாள். சனிக்கிழமை பொழுது விடிந்தது. வடிவாம்பாள் வழக்கப்படி மனோன்மணியம்மாளை எழுப்பி அவளுக்குரிய உபசரணை களைச் செய்ய எத்தனித்தாள். அன்று அந்த மடந்தை முற்றிலும் கேவலமான நிலைமையடைந்து தாறுமாறாகப் பிதற்றிக் கொண்டே இருந்தாள். வடிவாம்பாள் எழுப்பிய காலத்தில் மனோன்மணியம்மாள் தனது கண்களைத் திறக்காமலேயே பிதற்ற ஆரம்பித்தாள். "என் மனசைக் கொள்ளை கொண்ட என் துரையே! என் ராஜாவே! என்மேல் இன்னமுமா கோபம்! உங்களை நினைத்து நினைத்து, உருகி உருகி என் உயிரே அநேகமாய்ப் போய்விட்டது. என் சர்வாங்கமும் சுத்தமாய் ஒடுங்கிப் போய்விட்டது. மிகுதி உயிரும் போவதற்குள், உங்கள் முகத்தை நான் பார்க்கப் போகிறேனா? நான் எத்தனை கற்பகாலம் தவம் செய்தாலும், உங்களைக் கணவராய் அடைவது எளிது? அப்படிப்பட்ட யோக்கியதை நிறைந்த நீங்கள் என்னை மதித்து என் வீடு தேடி வந்திருக்க, அதை உணராது உங்களிடம் தாறுமாறாகப் பேசி நான் உங்களுக்குப் பெருத்த அபராதியாகி விட்டேனே! ஐயோ! உங்கள் சம்பந்தம் வேண்டாம் என்ற சொல்லும் இந்தப் பாவியின் வாயில் இருந்து வந்ததே! நான் சொன்னதை எல்லாம் நீங்கள் மறந்து இனி என்னை நாடப் போகிறீர்களா? நான் சொன்னதும், செய்ததும், தப்பிதம் தப்பிதம் என்று நான் லட்சம்தரம் வேண்டுமானாலும் சொல்லி, உங்கள் காலில் விழுந்து, கன்னத்தில் அடித்துக் கொள்ளுகிறேன்.