பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 . மாயா விநோதப் பரதேசி. புண்ணியாத்துமாக்களான இத்தனை பெரிய மனிதர்கள் சேர்ந்து இத்தனை தினங்களாய்க் கடவுளை ஸ்தோத்திரம் செய்து பூஜை முதலியவைகளை நடத்தி வருகிறார்கள். இன்னம் நம்முடைய கலி நீங்கவில்லை. ஆகையால், நான் இப்படியே இறந்து போக வேண்டும் என்பதே கடவுளின் சித்தம் போலிருக்கிறது. நான் அங்கே வந்து செத்து, அத்தனை ஜனங்களையும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்குவதைவிட இங்கேயே நிம்மதியாய் உன் மடியிலேயே என் பிராணனை விட்டு விடுகிறேன். அநாவசியமாக என்னையும் மற்றவரையும் உபத்திரவத்திற்கு ஆளாக்க வேண்டாம். ஏதடா இவள் நம்முடைய பேச்சை இப்படித் தட்டி மறுக்கிறாளே என்று ஆயாசப்படாதே" என்று உருக்கமாகக் கூறினாள். அதைக் கேட்ட வடிவாம்பாள் பதறிப் போய், "அம்மா! மனோன்மணி இதற்குள் நீ இப்படி மனத்தளர்ச்சி அடைந்து விட்டாயே! பொறுத்தார் பூமியாள்வார் என்று சொல்வதை நீ கேட்டதில்லையா? எப்படியும் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்ற ஒரே நம்பிக்கையை நாம் திடமாக மனசில் பதியவைத்துக் கொண்டு, இடையில் நேரும் எப்படிப்பட்ட துன்பங்களையும் பொருட்படுத்தாமல், எல்லா பாரத்தையும் அவன் மேல் போட்டு விட்டு காலத்தை எதிர்பார்த்தபடி நமது கடமையை நாம் செய்து கொண்டே போனால், சர்வக்ஞனான கடவுளுக்கு அது தெரியாமல் போகாது. எல்லா இடத்திலும் நமக்குத் தெரியாமல் மறைந்திருந்து நம்மைக் காப்பாற்றி வரும் கடவுளுக்கு அது தெரியூாமல் போகாது. இப்போது கடவுள் இங்கே இல்லை என்று நீ நினைக்கிறாயா? நாம் இருவரும் பேசிக் கொள்வது அவருக்குத் தெரியாதென்று நீ எண்ணுகிறாயா? அல்லது, உன் மனதை சிருஷ்டித்தவரான கடவுள் அதற்குள்ளிருந்து உன்னை வதைக்கும் துன்பங்களை அறிய மாட்டாரா? அல்லது, அதற்கு ஒரு பரிகாரம் தேடமாட்டாரா? கவலைப்படாதே அம்மா கூடிய சீக்கிரம் கடவுள் நல்ல செய்தி கிடைக்கும்படி செய்வார். நாம் அதை அசட்டை செய்தாலும், கடவுளுக்கு நாம் காட்ட வேண்டிய மரியாதையை மாத்திரம் மனசால் கூட அசட்டை செய்யக்கூடாது. நாம் எவ்வளவு கேவலமான நிலைமையில் இருந்தாலும், கடவுளிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டோம் என்ற குற்றமே ஏற்படக் கூடாது.