பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 223 வீட்டிற்குள்ளேயே இருந்து வந்தார். அதற்கு முன் அவருக்குப் பழக்கமாக இருந்த பத்மாசனி என்ற தாசிப் பெண், அவளுடைய அண்ணனான கலியப்பெருமாள் பிள்ளை என்பவர் ஆகிய இருவரும் துருக்கராக மாறி, அவருக்கு உதவியாக அவரோடு இருந்து வந்தார்கள். அவர்கள் இருவரும் சட்டைநாத பிள்ளையும் அந்த வீட்டில் எவ்வித அலங்காரத்தோடு இருந்தார்களோ அப்படியே கைதி செய்யப்பட்டு இப்போது இதோ ஆஜர் செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்றார். அந்த விநோதமான வரலாற்றைக் கேட்ட வக்கீல்கள் முதலிய எல்லோரும் பெருத்த வியப்பினால் தம்மை மறந்து, "ஆகா! அப்படியா சங்கதி" என்று தமது ஆச்சரியத்தை வெளியிட்டனர். ராயர் மேலும் பேசத் தொடங்கி, "முதல் அம்சத்தின் சாரம் இது தான். சிறையிலிருந்து ஒடி ஒளிந்திருந்ததான குற்றத்தைச் சட்டைநாத பிள்ளை செய்தாரா என்பதைத் தீர்மானிப்பதே முதல் அம்சமாய் இருக்க, இவருக்குத் துணையாக இருந்த மற்ற இருவரையும் இப்போது இங்கே ஆஜர்படுத்த வேண்டிய காரணம் என்ன என்ற கேள்வி பிறக்கலாம். சட்டைநாத பிள்ளை அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தைச் செய்தார் என்பது சம்பந்தமான சில தகவலை இவர்கள் மூலமாய் ருஜூப்பிக்க வேண்டும் ஆதலால் மற்ற இருவரும் கூடவே இருப்பது அவசியமாகத் தோன்றுகிறது. இவ்வளவே நான் இப்போது சொல்லக் கூடியது. மற்ற விஷயங்களை சாட்சிகள் வெளியிடுவார்கள்" என்று கூறிவிட்டு உட்கார்ந்து கொண்டார். உடனே, முதல் சாட்சி தஞ்சாவூர் பெரிய சிறைச்சாலையின் தலைமை அதிகாரி (ஜெயிலர்) அழைக்கப்பட்டார். அவர் சாட்சிக் கூண்டின் மேல் ஏறிக் கிரிஸ்துவ வேதத்தைத் தொட்டுப் பிரமாணம் செய்தபின், சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து தப்பித்துக்கொண்டு போன வரலாறு முழுதையும் அவர் மேலதி காரிக்கு விஸ்தாரமாக எழுதியனுப்பிய அறிக்கையின் நகலை வைத்துக் கொண்டு அதைப் படித்துக் காட்டி, அதுவே தமது சாட்சியும் என்று கூறினார். உடனே ராயர்:- (எழுந்து நின்று ஜெயிலரைப் பார்த்து) ஐயா! இந்தச் சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் அடைபட்ட முதல்