பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 மாயா விநோதப் பரதேசி பட்டவராய், "ஆ! அப்படியா" என்றனர். அந்த மன அதிர்ச்சியைத் தாங்கமாட்டாதவளாய் மனோன்மணியம்மாள் காம்பொடிபட்ட தாமரைப் புஷ்பம் போல அப்படியே மயங்கிக் கீழே சாய்ந்து விட்டாள். தனது உயிரையும் காதலையும் கொள்ளை கொண்ட சுந்தராங்கனான அந்தப் புருஷ சிங்கத்தைத் தான் பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்தப் பெண்மணியின் மனதில் எழுந்து துடித்ததானாலும், அத்தனை ஜனங்களுக்கெதிரில் நான் அவரை எப்படிப் பார்ப்பது என்ற நாணம் எழுந்து அவளை வதைக்கத் தொடங்கியது. ஆகவே, அவள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இருவித ஆசைகளால் உலப்பப்பட்டவளாய் வடிவாம்பாளை நோக்கி, "அக்கா என்னை மெதுவாகக் கொண்டு போய் என் படுக்கையில் விட்டு விடுங்கள். இனி நான் பூஜை மண்டபத்துக்கு வருவது ஒழுங்கல்ல" என்று நயந்து வேண்ட, அது போலவே அவள் உடனே தனது சயனத்தில் கொண்டு போய்விடப் பட்டாள். அன்றைய இரவு முழுதும் அந்த பங்களாவில் இருந்தோர் அடைந்த ஆனந்தமும் குதூகலமும் இவ்வளவென்று சொல்வதே சாத்தியமான காரியமல்ல. எல்லோரும் பரவசமடைந்து அடக்க இயலாத தமது மன எழுச்சியில் ஆனந்த நிர்த்தனம் செய்து ஓயாமலும் சலியாமலும் அதே பேச்சாகப் பேசிய வண்ணம் தூங்காமலும் ஆகாரத்தை நாடாமலும் அந்த இரவைக் கழித்தனர். அவர்கள் திருஷ்டிக்குக் கந்தசாமி விலையற்ற மாணிக்கக் குன்றாகவும், தெவிட்டாத சுவை போன்ற இன் நிலையாகவும் காணப்பட்டான்; அவன் போய் வந்த வரலாறு முழுதையும் கோபாலசாமி சொல்ல எல்லோரும் தெரிந்து கொண்டு, அவனுக்கு விஷக்கடியால் நேர்ந்த அபாயத்தைப் பற்றி அளவற்ற துயரமும், முடிவில் அவன் தப்பி வந்ததைப் பற்றி மட்டற்ற ஆனந்தமும் தோற்றுவித்தவராய்ப் பொழுதைப் போக்கினர். மறுநாளாகிய புதன்கிழமை அன்று, அந்த சிவ பூஜையை முற்றுவிப்பதென்றும், மற்ற தினங்களில் நடத்தியதைவிட நூறு மடங்கு சிரேஷ்டமாய் அன்று பூஜை தானதருமங்கள் முதலியவற்றைச் செய்வதென்றும், அன்றைய தினம் ஒவ்வொரு மிராசுதாரும் தலைக்குப் பதினாயிரம் ரூபாய் செலவு செய்வதென்றும், சென்னையில் உள்ள சகலமான