பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 303 ஆகையாலும், நான் அந்த உத்தரவை அண்ணாவையங்காரிடம் கொடுத்து, அவர் கைதிகளை அழைத்துக் கொண்டு தஞ்சைக்குப் போகும்படி செய்து நான் விசாரணை காலத்தில் வருவதாகச் சொல்லிவிட்டுக் கந்தசாமி போன இடத்தைக் கண்டு பிடிக்க முயன்றேன். செவ்வாய்க்கிழமை இரவு 12-மணிக்குத் தப்பித்து வெளியில் வந்தவன் உடனே சென்னைக்குப் போக ரயில் இல்லை. நான் சென்னைக்கு வரவும் இல்லை. ஆகவே, அவன் நேராக மன்னார்குடிக்கே போக முயன்றிருக்க வேண்டும் என்று நான் ஒருவாறு நிச்சயித்தேன். நடுஇரவில் அவன் அநேகமாய் நடந்து போயிருக்க மாட்டான், வண்டிகளில் தான் போயிருக்க வேண்டும் ஆகையால், அந்த ஊரிலிருந்து நீடாமங்கலம் வலங்கிமான் முதலிய ஊர்களுக்கு வழக்கமாய் விடப்படும் வாடகை வண்டிக்காரர்களை எல்லாம் முதலில் விசாரித்துப் பார்த்து விட வேண்டும் என்ற யோசனை தோன்றியது. அவர்கள் அநேகமாய் ரயில் ஸ்டேஷனிலிருந்தே போகிறது வழக்கம் ஆதலால், நான் நேராக ரயில் ஸ்டேஷனுக்குப் போய், அவ்விடத்தி லிருந்த வண்டிக்காரர்களை ஒவ்வொருவராய்த் தனிமையில் அழைத்து என்னிடமிருந்த பெண் படத்தைக் காட்டி, செவ்வாய்க் கிழமை இரவு 12-மணிக்கு, அம்மாதிரியிருந்த ஒரு பெண் பிள்ளை எந்த வண்டியிலாவது நீடாமங்கலம் பக்கம் போனதுண்டா என்று விசாரித்ததில், ஒரு குதிரை வண்டிக்காரன், தன் வண்டியில் போன தாகவும், வழியில் நட்டுவாய்க்காலி கொட்டி விட்டதாகவும், ஆலங்குடி ஏகாம்பர முதலியார் வீட்டில் அப்போதும் வியாதி யாய்ப் படுத்திருப்பதாகவும், தனக்குச் சேர வேண்டிய வண்டிச் சத்தத்தைக்கூட ஏகாம்பர முதலியாரே கொடுத்துத் தன்னை அனுப்பியதாகவும் சொன்னான். நான் உடனே அதே வண்டியில் உட்கார்ந்து கொண்டு, அந்த ஊரில் உள்ள ஒரு பிரபல டாக்டரிடம் போய், அவருக்கு ரூபாய் 50-கொடுத்து அவரை அதே வண்டியில் உட்கார வைத்துக் கொண்டு ஆலங்குடி போய்ச் சேர்ந்து கந்தசாமியைக் கண்டேன். காணவே, என் உயிர் வந்தது. நான் அப்போது ஜானிஜான் கான் சாயப்புவாக இருந்தேன். கந்தசாமி எனக்குப் பழக்கமான ஒருவருடைய பெண்ணைக் கலியாணம் செய்யப் போகிறவன் என்று சொல்லி, அவன் சென்னையிலிருந்து வந்த வரலாற்றையும் அந்த டாக்டரிடம் தெரிவித்தேன். நாங்கள் போய்ப் பார்த்த காலத்தில், கந்தசாமியின் மயக்கம் தெளிவதும்,