பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலையில் இலட்சியமும் வீரனும்

35


இங்கு விமர்சன ரியலிசத்தில் தொடங்கி சோவிலிச ரியலிசத்தில் முடிக்கிறார் ஆசிரியர். இது வர்க்கப் போராட்டத்தின் தொடக்கம்தான். ஆயினும் தன்னம்பிக்கையற்று அடிமைத் தனத்தில் உழன்ற தொழிலாளி தனது உழைப்பின் மதிப்பை உணர்ந்து அதை மதியாத சுரண்டல்காரனின் சுரண்டலை அறிந்து தன் சுயமதிப்பைப் பாதுகாக்கப் போராட முன்வருவது ஓர் உணர்வு மாற்றமாகும்.

தனி மனித உணர்வு மாற்றங்களைச் சித்திரிப்பது மட்டுமல்லாமல், சமுதாயத்தை மாற்றவல்ல, சமுதாய உணர்வு மாற்றங்களைச் சித்திரிப்பதே சோஷிலிச ரியலிசத்தின் தொடக்கம். அதன் வளர்ச்சிப் போக்கை அழகியல் கற்பனையாகக் காட்டுவதே சோஷலிச ரியலிசத்தின் குறிக்கோள்.

குறிக்கோளற்ற கலைப்படைப்பு, மனித உணர்வை மாற்றாது. தீமையை வெளிப்படுத்தாத கலை, தீமையை எதிர்த்துப் போராடும் மக்களது வீரத்தைப் போற்றாத கலை, கலைப் படைப்பின் தத்துவ உள்ளடக்கத்தையும் கலைப்பாங்கான உள்ளடக்கத்தையும் வெறுமையாக்கிவிடுகிறது.

கலையுண்மை என்பது, இருப்பதைச் சித்திரிப்பதோடு, இருப்பது எப்படி வளர்ச்சிபெறும் என்பதைச் சித்தரிக்க வேண்டும். ஒரு முளையைக் காட்டுவதோடு நின்றுவிடாமல் அது எத்தகைய மரமாக வருங்காலத்தில் வளரும், அதுவரை அதன் தேவைகள் என்ன என்பதைக் கலை நுணுக்கத்தோடு எடுத்துக் காட்டவேண்டும். வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய அம்சங்களையும் அவற்றை மரம் சமாளித்து வளர நடத்தும் இயற்கையின் போராட்டத்தையும் காட்டவேண்டும்.

நடப்பியல் உலகைச் சித்திரிப்பதற்கு நிகழ்காலத்தில் காலூன்றி நின்று உலகை நோக்கவேண்டும். வருங்கால வளர்ச்சியைக் காட்ட மனித குலத்தின் கனவுகளில் இருந்தும் காட்சிகளில் இருந்தும், கலைக்கூறுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை நடப்பியலை விட்டு விலகுவதாகவோ, கற்பனை உலகில் சஞ்சரிப்பதாகவோ எண்ணக்கூடாது.

குறிக்கோள்கள் ஆகாயக்கோட்டைகள் அல்ல. இயற்கைவாதி, தரையைக் கிழித்துக்கொண்டு முளை தலைகாட்டும் பொழுது அதனை மட்டுமே காண்கிறான். அதன் வருங்கால வளர்ச்சியைக் கற்பனை செய்வதில்லை. ஆனால் கலைஞன் இச்சிறு முளையை அதன் கடந்த காலம், வருங்காலம் இவற்றோடு தொடர்புபடுத்தி அதன் வளர்ச்சியின் தன்மையை உணர்ந்து முளை மரமாகி வளரும் காட்சியைக் கலைப் படைப்பாக்குகிறான். கலைஞன் வளர்ச்சி விதிகளை அறிந்தவனாக இருத்தல் வேண்டும். நிகழ்கால நடப்பியலையும் அதன் குறிக்-