பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

நா. வானமாமலை

அறிந்தபின் போலிக்கலை (imitation) படைக்கவில்லை. தமது படைப்பில் ஹோமரது கலை உண்மையைப் பயன்படுத்திக் கொண்டார். கம்பன், வால்மீகியின் கலைப் படிமங்களைப் பயன்படுத்திக் கொண்டான். ஷேக்ஸ்பியர் அவருக்கு முன் வாழ்ந்த கவிஞர்கள், வரலாற்று ஆசிரியர்களது படிமங்கள், கருத்துக்களைப் பயன்படுத்திக் கொண்டார்.

டால்ஸ்டாய் தமது போரும் அமைதியும் குறித்துக் கூறிய சொற்கள் இப்பிரச்சினையில் தெளிவு காணப்பயன்படுகின்றன:

இக்கதையின் வடிவம் எதுவென்று வரையறுப்பது சிரமமாயிருக்கிறது. ஏனெனில் ரஷ்ய இலக்கியம், மரபிலிருந்து விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. இது நாவல், சிறு கதை, கவிதை ஆகிய வடிவங்களுக்குப் பொதுவானது. ரஷ்யப் படைப்பாளிகள் இலக்கிய உலகில் புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்கள். ஆனால் இவை, இலக்கிய மாலையின் ஒருமையைச் சிதைத்துவிடாமல், அதனை அழகுபடுத்துகிற புதிய மலர்களாகவே திகழ்கின்றன.

மரபும் மாற்றமும் என்ற இலக்கியப் பிரச்சினை, கலை வளர்ச்சியோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இத்தகைய கருத்து இருக்க முடியுமா?’ என்று சில 'நவீனத்துவ வாதிகள்' கேட்கிறார்கள். அவர்கள் அழகியல் பிரச்சினையை சமூகவியல், தத்துவப் பிரச்சினையாகத் தடம்புரட்ட முயலுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இருப்புவாதத் தத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கார்ல் ஜாஸ்பெர்ஸ் என்னும் அறிஞர் வரலாறு பற்றி இவ்வாறு கூறினார்:

உலக வரலாறு சுழற்காற்றில் அகப்பட்ட தூசு, தும்பு போன்றது. குழப்பமான, ஒன்றோடொன்று தொடர்பில்லாத நிகழ்ச்சிகள் கொண்டது. ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொரு நெருக்கடிக்கு அது இயங்கிச் செல்லுகிறது. இடையிடையே சுகமான அனுபவங்கள். புயற் காற்று வேகம் தனியும்போது சில சமயங்களில் சிறு சிறு தீவுகளாகச் சிறிது நேரம் இருக்கிறது. மீண்டும் புயலில் சிக்கிப் பறக்கிறது.

உலக வரலாற்றை, ஒரு பேய் அறைந்து சிதைத்துவிட்ட ஒரு தெருவிற்கு ஒப்பிடலாம்.