பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரபும் மாற்றமும்

67

செல்வாக்குச் செலுத்தியது என்பது உண்மையன்று. உண்மையில் தொழிலாளிகளுக்கேற்ற புது உத்திகளைக் கையாண்டு, கவிதைகளைப் பல்கலைக்கழக மண்டபங்களில் இருந்து தெருச் சந்திகளுக்குக் கொணர்ந்தவர் மாயகாவ்ஸ்கி. பெர்த்தோல்டு பிரெஷ்டு பண்டைக் கதைகளைத் தலைகீழாக மாற்றி, கலை மதிப்பு மாற்றங்களை ஏற்படுத்தியவர். இவருக்கும் சோஷலிச ரியலிஸ்டுப் படைப்பு முறையே தத்துவக் கொள்கையாக இருந்தது. சிறிதுகாலம் நவீனத்துவப் போக்குகளோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதற்காக அவர்களை அவ்வகை எழுத்தாளர்கள் என்று கூறிவிடமுடியாது.

எனவே, நவீனத்துவத்தின் அடிப்படை வரலாற்றுக் கண்ணோட்டமும் உலகக் கண்ணோட்டமும், சோஷலிச ரியலிசத்திற்கு நேர் முரணானவை. அதன் தத்துவப் போக்கு உலகை அறிய உதவுவதற்குப் பதிலாகக் குழப்பத்தையே பரப்புகிறது. உலக வளர்ச்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் (ஒழுங்கான மேன்மேல் வளர்ச்சியான) முரண்பாடுகளின் மோதுதலால் படிப்படியாக ஏற்படுகிறது என்ற கண்ணோட்டம் நவீனத்துவத்திற்குக் கிடையாது. நவீனத்துவம் முதலாளித்துவத்தின் கழிசடைப் போக்குகளில் இருந்து விலகியோட முயன்று வெற்றி பெறாத தத்துவம். வரலாற்றுப் பொருள் முதல்வாதத் தத்துவமே, சமூக இயக்கத்தின் வளர்ச்சியையும் அதன் காரணமாகத் தோன்றுகிற கலை இலக்கியப் போக்குகளின் வளர்ச்சியையும் இணைத்துக்காட்டுகிற ஒரே தத்துவம் ஆகும்.

சோஷலிச ரியலிசக் கொள்கை லெனினுடைய 'பிரதிபலிப்புக் கொள்கை'யிலிருந்து தோன்றியது. இதனை மூன்றாம் பகுதியில் விளக்கியுள்ளோம். ஒவ்வொரு கலைஞனும் புதுமையைப் படைக்கிறான். அதில் தனித்திறமை மிளிர்கிறது. புதிய வாழ்வியல் கூறுகளை (கலை) அவன் படைக்கிறான். இதனை அழகியல் யதார்த்தம் என்று ஹெர்ஸன் அழைக்கிறார். இதற்குக் கலை உலகம் என்று பெலின்ஸ்கி பெயரிட்டுள்ளார். இது தான் கலை உலகின் பிரதிபலிப்புப் படிமம். இது உலக யதார்த்தத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டிருப்பதால் வலிமை யுடையதாயிருக்கிறது. அதன் காரணமாகவே சோஷலிச ரியலிசம், உலக இயக்கத்தின் பொது நியதிகளை உள்ளத்தில் பிரதிபலிக்கத் துணை செய்கிறது.

இது ரியலிச சார்பாளர்களது கொள்கை.

நவீனத்துவவாதிகள் வேறுவிதமான கொள்கையுடையவர்கள். பல்வேறு சிந்தனைப் போக்குடைய இவர்கள் ஷோப்பனேரின் தத்துவ அடிப்படையில் சிந்திக்கிறார்கள்.