பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரபும் மாற்றமும்

73

யீட்டுத் திட்டத்தையும் கற்றுக்கொண்டுதான் ஜீவாவின்.உலக இலக்கியக் கண்ணோட்டம் உருவாயிற்று.

தேசிய மரபு

இனி சோஷலிஸ்டு ரியலிசத்தின் இரண்டாவது கருத்தமைப்புக்கு வருவோம். தேசிய மரபு என்றால் என்ன? எர்மலியேவ் என்ற அமெரிக்க எழுத்தாளர், சோஷலிஸ்டு ரியலிசம் ஒரு கலைப்படைப்பு முறை அல்ல என்றும் ஸ்டாலினால் கட்டளையிடப்பட்டுப் பரப்பப்படும் பிரச்சாரம்தான் என்றும் எழுதினார். பிற நாட்டுக் கலைகளின்மீது சோவியத் நாட்டினர் ஆதிக்கம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கோட்பாடுகள்தாம் சோஷலிச ரியலிசம் என்று அவரும் அவரைப் போன்ற எழுத்தாளர்களும் கூறுகிறார்கள்.

உலக எழுத்தாளர்கள் அனைவர் மீதும் கட்டளை போட்டு நிறைவேற்றக் கூடிய திட்டம் சோஷலிஸ்டு ரியலிசமாம்! உலகம் முழுவதும், அடிமைப்பட்டு உழலும் உழைக்கும் மக்களுக்காகச் சமூகத்தை ஆய்வு செய்து, அதில் தனி மனிதனது ஸ்தானத்தை அறிந்து, அவனை விடுவிக்க இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள், ஸ்டாலின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்களாம். தியோடோர் டிரீஸர், அப்டன் சிங்க்ளேர், பெர் தோல்டு பிரெஷ்ட், லூயி ஆரகான், பாப்லா நெருடா, பிரேம் சந்த், ரகுநாதன், செல்வராஜ், பொன்னீலன் முதலிய நூற்றுக் கணக்கான சோஷலிச ரியலிச எழுத்தாளர்கள் அனைவரும் சோவியத் கட்டளையை எதிர்நோக்கி எழுதுகிறார்களாம்.

பிரேம்சந்த் இந்தியக் கதைப் பொருள்களைத்தான் தமது சிறு கதைகளில் கையாளுகிறார். ஏழை எளிய ஆசிரியரின் வாழ்க்கை, அவருக்கு இந்தியச் சமூகத்தில் இருக்கும் மதிப்பு, முதலாளித்துவச் சமூகத்தில் கல்விக்கு இருக்கும் மதிப்பு, சமூக வாழ்க்கையில் கல்விப் பிரச்சினை ஆகியன குறித்து எழுதுகிறார். இந்திய ஆசிரியர், இந்திய விவசாயி, இந்தியத் தொழிலாளி, இந்தியக் கடைக் குமாஸ்தா இவர்களுடைய வாழ்க்கையைச் சமூக உயர் தட்டில் வாழ்வோர், சமூக ஆதிக்கத்தைக் கையாண்டு அடிமைப்படுத்துவதையும், அதை அவர்கள் உணர்வதற்கான புதிய தன்னுணர்வும் சமூக உணர்வும் எழுவதையும் அவர் சித்திரிக்கிறார். இதில் அவர் சோஷலிச ரியலிசக் கொள்கையால் தத்துவத் தாக்கம் பெறுகிறார். நவீனத்துவ வாதிகள் ஷோப்பனேர், நீட்ஷே, காப்ஃகா, பால்சார்த்ரே ஆகிய முதலாளித்துவ ஆதரவுத் தத்துவ ஞானிகளின் செல்வாக்குக்குட்பட்டு இலக்கியம் படைத்தால் அது. சுதந்திரமான இலக்கியமாம்.