பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

மார்ட்டின் லூதர்


சேமித்து வைத்திருக்கும் தானியத்தைப் பாப மன்னிப்பு சீட்டு என்ற பேரால் தட்டிப்பறித்துக் கொள்ளையடிக்கும் இந்தச் சண்டாளர்கள் ஒழிய வேண்டும். போப்புக்குப் பாதகாணிக்கை செலுத்த வேண்டுமே என்ற பயத்தினால் ஏழைகள், கொள்ளைக்காரர்களாய் திருடர்களாய் மாறியிருக்கும் கொடுமை நமது தாயகத்தின் மண்ணிலிருந்து ஒழியவேண்டும். பொது நட்பு உலவ வேண்டும். மதிப்பு மலரவேண்டும். மக்களுக்கு நல்லொழுக்கம் வளரவேண்டும். தன் தவறை தானே உணர்ந்து மனம் நோகும் மாபெரிய சக்தியை நாம் அவர்களுக் களிக்க வேண்டும். நான் ஆண்டவனை நம்புகிறேன். அவனிடம் அழியாத அன்புகொள்கிறேன். மாறாத பக்தி செலுத்துகிறேன். எனது மாற்றானையும் மன்னித்துவிட அவனிடம் மன்றாடுகிறேன். அவன் பேரால் மக்களை ஏமாற்றும் சடங்குகள் எதுவாயினும் வெறுக்கிறேன். யார் செய்தாலும் எதிர்க்கிறேன். இந்த இடம், அந்த இடம், சொந்த இடம் என்ற பேதமில்லாமல் எந்த இடத்திலும் எதிர்க்கிறேன். ஓராயிரம் ஈட்டிகள் என் உடலில் பாய்ந்து குடல் சரிந்து நான் கோர மரணம் எய்துவதானாலும் என் கடைசி மூச்சுல்லவரையிலும் இக்கொடுமைகளை எதிர்த்தே தீருவேன். கடலுக்கு இப்பாலுள்ள நாடுகளிலும் சரி, அப்பாலுள்ள நாடுகளிலும் சரி எங்கெல்லாம் இந்த நாசவேலை நடக்கிறதோ அங்கெல்லாம். என் ஆவேசக்குரல் கொண்டு எதிர்த்தே தீருவேன். இந்த நோய் உலகில் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஒழியவேண்டும்.