பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சமய நம்பிக்கை ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டு, அரசியல் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேண்டு கோளில் அன்னிய எதிர்ப்பு - வெறுப்பு கொப்பளிக்கிறது. வெள்ளைப்பரங்கிகள் பற்றிய வெறுப்பை விஷம்போல ஆவேசத்துடன் உணர்த்துகிறது. சாதாரண மக்களையும் சான்றோர்களையும் போற்றிப் பணிந்து புலப்படுத்துகிற மருதுபாண்டியரது இந்தப் பணிவான கோரிக்கையின் பாங்கை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. இத்தகைய பொது அறிவிப்புக்களை போராளிகள் அப்பொழுது இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளைத் தவிர அவைகளை அடுத்துள்ள தொண்டைமான் சீமையிலும் திருச்சி, தஞ்சைப்பகுதிகளிலும் ஆங்காங்கு வெளியிட்டிருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.

காரணம் மருதுபாண்டியர்கள் தொடங்கிய விடுதலைப் போராட்டம், மறவர் சீமையில் மட்டும் அல்லாமல், திருச்சிராப்பள்ளிக்கும், திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட தமிழகம் எங்குந் தழுவிப்பரவ வேண்டும் என்பதே சிவகங்கைச் சேர்வைக்காரர்களது நோக்கமாக இருக்க வேண்டும். அமெரிக்க நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பொழுது அந்த நாட்டுப் போராளிகள், கையாண்ட இந்த விளம்பர வேண்டுகோள் முறையை ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நமது தமிழகத்திலும் அப்பொழுதைய அந்நிய எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது மருது சேர்வைக்காரர்கள் கையாண்டு இருப்பது வியப்பை அளிப்பதாக இருக்கிறது.

கும்பெனியாரின் கெடுபிடிகள் இந்த "விடுதலை இயக்க” அறிவிப்புகளின் மீது பாய்ந்து பிய்த்து அழித்து விட்டனர். என்றாலும் சென்னையில் உள்ள கும்பெனியாரின் கவர்னருக்கு, தகவலுக்காக திருச்சியில் இருந்து அனுப்பப்பட்ட நகல் அறிவிப்பு அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு, விடுதலைப் போரைப்பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு ஆர்வம் விளைவிக்கும் சிறந்த வரலாற்றுச் சுவடியாக விளங்கி வருகிறது. நாட்டுப்பற்றை நெருடி விடும் சாதனமாக என்றென்றும் இந்த அறிவிப்பு விளங்கும் என்பதில் ஐயமில்லை.