பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள் ராணுவ உதவி புரிந்ததற்காக அப்பொழுதைக்கப் பொழுது உரிய வெகுமதியை ரொக்கப்பணமாகவோ அதற்கு ஈடான நடவடிக்கைகள் மூலமாகவோ பெற்றள்ளனர். நவாப் வாலாஜா முகம்மது அலியும் கும்பெனியாரும் கடைசியாக கி. பி. 1792 ல் செய்து கொண்ட கர்நாடக உடன்படிக்கையில் இத்தகையதொரு கடன் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. மேலும் நவாப் கும்பெனியாருக்குக் கொடுக்க வேண்டிய அனைத்துப் பாக்கிகள் பற்றியும் இந்த உடன்படிக்கையின் பாரா 4,5,6,7,9ல் தெளிவாக வரையறுக்கப்பெற்று இருந்தது. [1]இன்னும் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமானால், கி. பி. 1758-59ல் சென்னை கும்பெனியாரது கோட்டையைக் பிரஞ்சுக்காரர்களை விரட்டியடிப்பதற்கான கும்பெனியாரது ராணுவச் செலவு முழுவதையும் நவாப் வாலாஜா முகம்மது அலி ஏற்றுக் கொண்டார். ஏனெனில் அந்தக் கோட்டை அவரது நண்பர்களது இருக்கையல்லவா? அதேபோல் கி .பி. 1761 ல் கும்பெனியார் பிரஞ்சுக்காரர்களின் பாண்டிச்சேரிக் கோட்டையைப் பிடிப்பதற்கான ராணுவச் செலவையும் நவாப்பே ஏற்றுக்கொண்டார். என்ன காரணம் தெரியுமா? பாண்டிச்சேரி அவரது எதிரியின் கோட்டை.[2] அத்துடன் மைசூர் திப்புசுல்தானுடனான போர் கும்பெனியாரது சுயநலத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட நடவடிக்கையாகும். அந்த அளவுக்குக் கும்பெனியாரைத் தமது நெருக்கமான நண்பர்களாகக் கொண்டிருந்த நவாப் முகம்மது அலிக்கு அந்தப் பரங்கிகள் செய்த கைம்மாறு இதுதான். இத்துடன் அவர்கள் தங்கள் துரோக நடவடிக்கையை நிறுத்திக் கொண்டு இருந்தால் கூட அவர்களைப் பழிக்காமல் இருந்திருக்கலாம். பேராசையும் அதிகார வெறியும் பித்தாக மாறி பேயாட்டம் ஆடிய அவர்களது சுய உருவம் அறிந்து தவித்த நவாப் உம்-தத்துல்-உம்ரா, தாங்க முடியாத கவலை, கடன் தொல்லை. குடிமக்களையும் நவாப்பின் ஊழியர்களையும் தங்களது ஆயுத பலத்தினால் பயமுறுத்தி, நவாப்பிற்கு வருமானம் எதுவும் கிடைக்காமல் செய்யும் கொடுமை. வேதனையும் விரக்தியும் சேர்ந்த நோயாளியாக 15-8-1801 ல் பரங்கியரது அவமானத்தினின்றும் தப்பித்துக் கொள்ள கண்ணை மூடிவிட்டார்.[3]


  1. 6 Aitehisum, Collection of Treaties, vol.5
  2. 7 Secret Consultations, vol. 13. (31-7-1801), p. p.654–68.
  3. 8 Srinivasachari C. S : The Inwardness of British Annexation in India (1951) p. 71.