பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

திருப்பத்தூர் கோட்டை

இந்தக் கோட்டை அமைப்பு பற்றி சரியான விவரங்கள் இல்லை. ஏழாவது நூற்றாண்டில் இந்த ஊரில் கோவில் கொண்டுள்ள திருத்தளிநாதரைத் தரிசித்து அப்பர், சம்பந்தர், பாடிய தேவாரங்கள் உள்ளன. அடுத்து இந்தக்கோயிலில் உள்ள எட்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன்மாறன் சடையனது வட்ட எழுத்து கல்வெட்டுக்களும் இந்த ஊரின் பழமையைப் பறைசாற்றுவனவாக உள்ளன. மற்றும் ராஜராஜசோழன், மாற வர்மன் சுந்தரபாண்டியன் கி. பி. 1216 - 38 மாறவர்மன் பராக்கி ரமன் பூரீவல்லயன் வீரபாண்டிய குலசேகரனது திருப்பணிகளைக் குறிக்கும் தொண்ணுற்றுஎட்டு கல்வெட்டுக்களும் அங்கு உள்ளன. என்றாலும் பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் மதுரை சுல்தானது ஆட்சியை எதிர்த்துப் போராடிய சூரக்குடி விசயாலய தேவன் இந்தக்கோட்டையை அமைத்து இருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது. பின்னர் இந்தக்கோட்டை இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது முக்கியமான அரண்களில் ஒன்றாக அமைந்து இருந்தது இதனை திருச்சிராப்பள்ளி வழியாக தெற்கே செல்லும் மதுரைப்பெருவழியில் இந்தக்கோட்டை அமைந்து இருந்ததால், ராணுவ முக்கியத்துவம் மிகுந்து இருந்தது. அதனால் பிரான் மலைப் போரில் தோல்விகண்ட பரங்கிகள், திருப்பத்தூர் பகுதிக்குப் பின்னடைந்து, திருப்பத்தூர் கோட்டையைப் பிடிப்பதில் அக்கரை செலுத்தினர். கர்னல் அக்கினியூ, திருப்பத்தூருக்கு வடக்கே ஆறுகல் தொலைவில் பாளையம் இறங்கி தாக்குதலைத் தொடுத்தான்.

ஏற்கனவே கோட்டைச் சுவர்கள் பழுது பார்க்கப்படாமல் இருந்த காரணத்தினால் பரங்கிகளது பீரங்கி குண்டுகள் எளிதாக வடக்கு கிழக்குச் சுவர்களை வெடித்துப் பிளக்கச் செய்தன. கிளர்ச்சிக்காரர்கள் மிகுந்த வீரத்துடன் போராடினர், முதன்முறையாக "ராக்கெட்" வகை குண்டுகளையும், இந்தப்போரில் பயன்படுத்தினர். என்றாலும் பரங்கிகளது வெடிகுண்டு வீச்சு, மிகவும் உக்கிரமாகவும் மிகுந்த அழிவை ஏற்படுத்தியதாகவும் இருந்தது. கிளர்ச்சிக்காரர்களால் இந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. 25-7-1801ல் கும்பெனியார்கோட்டையைப் பிடித்-