பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரை நோக்கி பின்னடைந்தனர். மாலைவரை சுடுதல் நீடித்தது. லெப்டி. பூருஸ்லி மிகவும் மோசமாகக் காயமடைந்தான். ஒரு பரங்கி வீரன் கொல்லப்பட்டான். எட்டுப்பேர்காயம் அடைந்தனர். கூலிக்கு மாரடித்த சுதேசி வீரர்களில் இருவர் கொல்லப்பட்டனர். இருபத்து நான்குபேர் காயமடைந்து கிடந்தனர். இவர்களுக்கு கட்டுக்கட்டி பக்குவம் செய்வதில் இரவுப்பொழுது போயிற்று. கிளர்ச்சிக்காரர் தரப்பு சேதம் தெரியவில்லை.

அடுத்த நாள் (30. 7. 1801), மீண்டும் கிளர்ச்சிக்காரர்களது எதிர்ப்பை எதிர்பார்த்து கும்பெனியார் அணி அரண்மனை சிறு வயல் கிராமத்தை அடைந்தபொழுது, கிராமத்தில் மயான அமைதி குடிகொண்டு இருந்தது. அத்தனை வீடுகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு இருந்தன. சின்னமருது சேர்வைக் காரரது மாளிகையும் சிவத்த தம்பியின் இல்லமும் கம்பீரமாகக் காட்சியளித்தன. அங்கிருந்தோர் அனைவரும் தெற்கே அடர்ந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டனர்.[1]

பிரான்மலை

சிவகங்கைச் சீமையின் வடபகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூர் கோட்டையைப் பரங்கிகள் கைப்பற்றி தங்களது திருச்சிராப்பள்ளி, நத்தம் மதுரைப்பெருவழியின் நிலையான அங்கமாக அமைத்துக் கொண்டனர். அத்துடன் அந்தக் கோட்டைக்கும் அப்பால் உள்ள காவல்நிலையான பிரான்மலையையும் பிடிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டனர். காரணம் சிவகங்கைக் கிளர்ச்சிக்காரர்களுக்கு திண்டுக்கல், விருபாட்சி, வாராப்பூர் பாளையக்காரர்களது உதவி கிடைக்கவிடாமல் தடுப்பதற்கு பிரான்மலை அரண் உதவும் என்பது அவர்கள் முடிவு, குறிப்பாக வாராப்பூர் போளையக்காரரான பொம்மைநாயக்கர் மருது சேர் வைக்காரர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்து வந்ததுடன் நத்தம், பிரான்மலைப் பகுதிகளில் கிளர்ச்சிக்காரர்கள் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடத்த மிகவும் உறுதுணையாக இருந்தார்.


  1. 4. Col. Welsh: Military Reminiscences. (1831) vol. I pp 89-92