பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சிறப்புரை

டாக்டர்
கோ. விசயவேணுகோபால், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
எம். ஏ. எம் லிட்., பிஎச்.டி. மதுரை - 6.25 021


பேராசிரியர். தமிழியல் துறை

கி.பி. 17ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாறு வரலாற்றாசிரியர்களால் இன்னும் விளக்கப்படாத நிலையே உள்ளது. இக்காலகட்டத்தைச் சேர்ந்த ஆற்காடு நவாப்புகள், மதுரை நாயக்கர், தஞ்சை மராத்தியர், மைசூர் சுல்தான்கள். சேதுபதி மன்னர், பல்வேறு பாளையப் பட்டுகளின் சிற்றரசர்கள் ஆகியோரின் தனித்தனி வரலாறுகள் முழுமையாக எழுதப்படவில்லை. அத்தகைய வட்டார வரலாறுகள் நடுநிலையோடு எழுதி முடித்த நிலையில்தான் இவற்றை ஒப்பிட்டு ஒரு பொதுமையான தமிழக வரலாற்றினை எழுத முடியும். இவற்றிற்கான முதன்மை ஆதாரங்கள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடப்பது ஒரு தடங்கல். கிடைக்கும் ஆதாரங்களையும் முறைப்பட எண்ணி வரலாறு எழுதும் முனைப்பும் குறைந்து நிற்கிற நிலை மற்றொன்று. இத்தகு சூழல்களில் டாக்டர் எஸ்.எம். கமால் அவர் களின் "மாவீரர் மருதுபாண்டியர்" என்ற நூல் வெளிவருவது வரவேற்கத்தக்கது: பாராட்டத்தக்கது. பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ளவேண்டிய ஆய்வுகளை அரசுப் பணியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் செய்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகும். கி. பி. 1780 முதல் கி.பி. 1801 வரை சிவகங்கைச் சீமையில் பிரதானிகளாக இருந்து பரங்கியரோடு போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களது வாழ்வினை, கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் கோவையாக எழுதியுள்ளார். 20 ஆண்டு வரலாறே 250 பக்கங்களுக்குமேல் நீண்டுள்ளது. "விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்" என்ற தலைப்பில் இவ்வாசிரியரே ஒரு நூல் எமுதியுள்ளார். அந்நூலைக் காட்டிலும் இந்நூல் ஆய்வு அணுகுமுறைகளைப் பின்பற்றிச் சான்றாதாரங்களின் அடிப்படையில் செம்மையாக நடுநிலையோடு எழுதப்பட்ட நூலாகத் திகழ்கிறது. சிவகங்கைச் சீமை வரலாற்றோடு பிற சீமைகளின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளமையால் இயல்கள் தொடர்ச்சியாக ஒன்றினைப் பற்றியே அமையாமல்