பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


ஜூன் மாதம் 17ம் தேதி பிரான்மலை அருகே கும்பெனிப் படையை எதிர்ப்பதற்கு கிளர்ச்சிக்காரர்கள் முனைந்து இருந்தனர். பொம்மையநாயக்கரது ஆட்களும் கிளர்ச்சிக்காரர்களும் ஆக ஐந்நூறு பேர் ஆயதபாணிகளாக தயார் நிலையில் நின்றனர்.[1] கர்னல் ஸ்டுவர்டு தலைமையிலான அணி பிரான்மலைக்கு மேற்கே இருந்து முன்னேறி வந்தது. அவர்களது குதிரை அணி இரண்டு பிரிவு களாகப் பிரிந்து தொடர்ந்து வரும் தூசுப்படைக்கு உதவியாகச் சென்றன. மைசூர் போருக்குச் சென்று திரும்பிய கர்னல் இன்னி nம் இந்தத் தாக்குதலில் கலந்து கொண்டான். கிளர்ச்சிக்காரர் களது ஆவேசத்தாக்குதலுக்கு முன்னர் ஒரு அடி கூட முன் செல்ல முடியாமல் தத்தளித்தனர். இறுதியில் நத்தத்திற்குப்பின் வாங்கி ஓடினர். [2] மீண்டும் 4-7-1801ல் மற்றொரு தாக்குதலை பரங்கிகள் தொடுத்தனர். இந்த முறையும் மறவர்களது மரண அடியைத்தாங்கிக் கொள்ள இயலாமல் பரங்கிகள் உயிர்தப்பி ஓட்டம் பிடித்தனர். ஆனால் 18.9-1801ம் தேதி அன்று பரங்கிகள் மற்றொரு பெரிய தாக்குதலை பிரான்மலையில் மேற்கொண்டனர். இந்த முயற்சிக்கு புதுக்கோட்டைத் தொண்டமானது கூலிப்படைகள் கும்பெனியாரது ஏழாவது ரெஜிமெண்ட்டின் முதலாவது அணியுடன் சேர்ந்து உதவினர்.[3] இந்தப் போரில் முடிவு கும்பெனியாருக்கு சாதகமாக அமைந்து விட்டது. கிளர்ச்சிக்காரர்கள் காரைக்குடி பகுதிக்குப் பின்வாங்கினர். அவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான ஆயுதங்கள் பரங்கியர் கையில் சிக்கின.

கள்ளரும், கள்ளர் தலைவரும்

மறவர்களைப் போன்றே கள்ளர்களும் போரிடும் பரம்பரையாக இருந்தனர். இந்த சமூகத்தினர் குறிப்பாக தெற்கு நாட்டுக் கள்ளர் (தஞ்சாவூர்) கீழ்நாட்டுக் கள்ளர் (மேலுர்)பிறமலை நாட்டுக் கள்ளர் (மதுரைக்கு மேற்கு) என வழங்கப்பட்டனர். இவர்கள் ஆங்காங்கு பல நாடுகளாகப் பிரிந்து அம்பலக்காரர் ஒருவர் தலைமையில் கட்டுப்பட்டு கூட்டு வாழ்க்கை நடத்தி வந்தனர்.[4] இவர்-


  1. Military Consultations vol. 285. A (18-6-1801) pp. 4980-81
  2. Military Consultations vol. 288 A (19-9-1801) p. 6859
  3. Military Consultations vol. 288 A (19-9-1801) p. 6859
  4. Francis. W: Madurai Gazeteer vol. 1 (1914)