பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

பற்றிய தகவலைக் கொடுக்கிறது.[1] மேலுர்நாடு குழப்பமாக இருப்பதாகவும், கள்ளர் தலைவர்களைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டதில், கீழ்வளவு. அன்னுர் நாட்டுத்தலைவர்கள் அவரது அழைப்பைப் புறக்கணித்துவிட்டனர். அவர்களது நடவடிக்கைகளை நோட்டமிடுமாறு நிலக்கோட்டை தாசில்தாருக்கு ஆணை பிறப்பித்து இருப்பதாக அந்தக் கடிதத்தில் கண்டு இருந்தது. அடுத்து கர்னல் இன்னிங்ஸ் மேலுருக்குச் சென்றான். கள்ளர் தலைவர்களைச் சந்தித்தான். சாதுரியமாகவும், நயந்துபேசியும், அவரது பேச்சைக் கேட்காதவர்களை மிரட்டியும் கும்பெனியாரது நடவடிக்கைகளுககு உதவுமாறும் சிவகங்கை சேர்வைக்காரர்களது அணிக்கு எவ்வித ஆதரவும் வழங்கக்கூடாது எனவும் அவர்களது “சத்தியத்தைப்” பெற்று வந்தான். இந்தக் கள்ளர்களிலும் “குள்ளன்” ஒருவன் - அர்ஜானப் பெருமாள் என்பவன் மிகுந்த விசுவாசத்துடன் சிவகங்கை சமீந்தாரை ஆதரிக்க முன் வந்தான்.[2]

பின்னர் கள்ளர்நாட்டில் கீழ்நாட்டிற்கும், தெற்குநாட்டிற்கும் இடைப்பட்ட கள்ளர் நாடான தொண்டமான் நாட்டின் தலைவரான புதுக்கோட்டைத் தொண்டமானையும் பரங்கிகள் அணுகினார்கள். சிவகங்கைக்கும் புதுக்கோட்டைக்கும் இடையில் நிலவிய உறவுகள் நேயமானதாக இல்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக, ஏற்கனவே கி. பி. 1755 ல் தஞ்சை அரசரது படையெடுப்பின் பொழுது தொண்டமான் சிவகங்கை அரசருக்கு எதிராக செயல்பட்டிருந்தார். ஆதலால் இந்தக் “கள்ளரை” கும்பெனியார் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வதில் சிரமம் எதுவும் இல்லை. தஞ்சாவூரில் கும்பெனியாரது பிரதிநிதியாக இந்த வில்வியம் பிளாக்பர்ன், புதுக்கோட்டைக்கு விரைந்து சென்றான். கள்ளர் தலைவரான விஜயரகுநாத தொண்டமானைச் சந்தித்துப் பேசினான். தொண்டமானும் கும்பெனியாரது பிரதிநிதியை அரசமரியாதைகளுடன் தர்பாரில் வரவேற்று உபசரித்தார். கும்பெனியாரது எதிரிகளைத் தமது சொந்த எதிரிகளாக கருதுவதாக, அன்னியோன்னிய உணர்வுடன் பேசினார்.


  1. Madurai District Records vol. 1220, p.p. 106
  2. Ibid vol. 1182, (5-9-1801) p. 149.