பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கிளர்ச்சிக்காரர்களுக்கு மக்கள் பேராதரவு வழங்கினர்.[1] நாகூரை முற்றுகையிட்ட இந்த அணியை கும்பெனியாரின் பிரதிநிதி கேப்டன், பிளாக்பர்ன் கடுமையாகத் தாக்கினான். கிளர்ச்சிக்காரர்களது முன்னேற்றம் தடைப்பட்டது. முயற்சி தோல்வியுற்றது. இந்தத் தோல்விக்கு தஞ்சை அரசரும் புதுக்கோட்டைத் தொண்டமானும் தான் காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.[2]

கும்பெனி வீரர்களுக்குத் தேவைப்பட்ட வெடிமருந்து, உணவுப்பொருட்களை இந்த “இரண்டு விசுவாசிகளும்” வழங்கி உதவியதுடன், தங்களுடைய ஒற்றர்கள் மூலம் கிளர்ச்சிக்காரர்கள், அவர்களது ஆதரவாளர்கள் பற்றிய துப்புக்களைச் சேகரித்து அப்பொழுதைக்கப்பொழுது அனுப்பி வந்தனர்.[3] அறந்தாங்கி காட்டிற்குள் புகுந்து, இருந்த முன்னூறு கிளர்ச்சிக்காரர்களை விரட்டி அடிப்பதற்கு எழுநூறுவீரர்களைத் தொண்டமான் அனுப்பி வைத்தார். அவர்களது உதவியினால், பிளாக்பர்ன் கிளர்ச்சிக்காரர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துத் தாக்கினான்.

கிளர்ச்சிக்காரர்களது மற்றுமொரு அணி கோட்டைப்பட்டினத்தில் இருந்தது. அந்தப்பகுதி பாளையக்காரர் சிலரது உதவியுடன் அந்த அணி தஞ்சையை நோக்கிச் சென்றது. இந்த அணிக்கு பட்டூர் தலைமை தாங்கிச் சென்றார். இவர் ஏற்கனவே மயிலப்பனுடன் சேர்ந்து முதுகுளத்தூர் கமுதிப் போர்களில் பங்கு கொண்டவர். எதிர்ப்பட்ட சில பாளையக்காரர்களைத் தாக்கி, அவர்கள் பின்வாங்கி ஓடுமாறு செய்தார், இதனையறிந்த பிளாக்பர்ன், மேஜர் மேயர் தலைமையில் நான்கு அணிகளையும் ஆயிரம் கைக்கூலிகளையும் அனுப்பி வைத்தான். அறந்தாங்கி வழியாக அவர்கள் சிறுகம்பையூர் சென்றனர். அங்கிருந்து வாரூர் அருகே முகாமிட்டு இருந்த கிளர்ச்சிக்காரர்களுடன் மோதினர். கடுமையான சண்டை, ஐம்பது கிளர்ச்சிக்காரர்கள் தியாகிகள் ஆயினர்.


  1. Military Consultations vol. 296 (11-8-1801) p. 5645.
  2. Military Consultations vol. 285-A (1–7-1801) p. 5034
  3. Ibid 12-8–1801 pp, 6900-6901