பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

திடீரென அப்பொழுது மழை பெய்ததால் பரங்கிகள் தப்பினர்.[1] என்றாலும் தஞ்சை நோக்கிச் சென்ற பட்டூர் அணி துண்டிக்கப்பட்டதால் அவர்களது திட்டம் நிறைவேறவில்லை. ஆனால் அறந்தாங்கி காட்டில் அத்தியோடி என்ற இடத்தில் கிளர்ச்சிக்காரர்களிடம் அகப்பட்ட கும்பெனியாரது கூலிகள் படாத பாடுபட்டனர். சாப்பிடுவதற்கு ஒரு மணி அரிசி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. குதிரைகளுக்கு கூளமும் கூட கிடைக்காது தவித்தனர்.

கமுதிக்கோட்டை

21. 7. 1801 தேதி கமுதிக்கோட்டையை வெள்ளைமருது தலைமையிலான படைப்பிரிவு தாக்கியது. அப்பொழுது அந்தக் கோட்டையின் பாதுகாப்பு லெப்டினண்ட் கார்டு பொறுப்பில் இருந்து வந்தது. அவருக்கு உதவுவதற்கு இராமநாதபுரம் மறவர் அணியும் மூன்றாவது ரெஜிமெண்ட்டில் முதல் அணியும் அங்கு நிலைகொண்டு இருந்தன. ஒருவார முற்றுகைப்போரினால் பயன் ஏதும் ஏற்படாததால், வெள்ளைமருது அவசர அலுவலாக சிவகங்கை திரும்பினார். முற்றுகையைத் தொடருமாறு மீனங்குடி முத்துக்கருப்பத்தேவரைக் கோரி இருந்தார். மிகுந்த உற்சாகத்துடன் கிளர்ச்சிக்காரர்கள் அணி அங்கே தாக்குதலைத் தொடர்ந்தது. 13. 8. 1801ம் தேதியன்று வெள்ளைத் தளபதி கார்டு சமாதானம் கோரி வெள்ளைக்கொடியுடன் கோட்டைக் கொத்தளத்தில் நின்றுகொண்டு கிளர்ச்சிக்காரர்களது ஒப்புதல் கோரினான்.[2] அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத கிளர்ச்சிக்காரர்கள் அவரை சரணடையுமாறு நிர்ப்பந்தித்து வந்தனர். முற்றுகை தொடர்ந்தது. இதற்கிடையில் இந்த அணியினரில் சிலர், பழமனேரிக்குச் சென்று அங்கிருந்த கும்பெனிப்படையைத் துரத்தி அடித்தனர். அடுத்து திருச்சுழியையும் கைப்பற்றினர்.[3]

இந்தகைய தோல்விகளினால் பதட்டம் அடைந்த கும்பெனியார், இராமநாதபுரம் கோட்டையில் இருந்து அவசர உதவியாக அறுநூறு சுதேசி சிப்பாய்களையும் நாகலாபுரத்தில் இருந்து ஐந்நூறு எட்டப்பனது ஆட்களையும், மூன்று பவுண்டு பீரங்கிகள்


  1. Ibid 27-8-1801 pp. 6934-35
  2. Military Consultations vol. 285. A. pp. 6850-51
  3. Ibid. 286. 4.8.1801. pp. 5352-56